ஓசூரில் உயிரிழந்த காளை- ஊரே கதறி அழுத பரிதாபம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரின் செல்லப் பிள்ளையாக வலம் வந்த கோயில் காளை மாடு திடீரென உயிரிழந்தது. பொதுமக்கள் இறந்த காளை மாட்டிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தனர்.
சுமார் 20 வயது மதிக்கத்தக்க கம்பீரமாக காட்சியளித்து அனைவரையும் கவர்ந்த காளை மாடு, டிவிஎஸ் நகர் பகுதியில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு சொந்தமான கன்றுக்குட்டியாக இருந்த பொழுதே அங்கிருந்து வெளியேறிவிட்டது. அவ்வாறு வெளியேறிய அந்த மாடு சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக ஒசூரில் பிரதான சாலைகளின் வழியே வலம் வந்து, பொது மக்களுக்கு எந்த வித இடையூறும் இல்லாமல் தனது வாழ்க்கையை நடத்தி வந்தது. மேலும் அந்தக் காளை மாட்டிற்கு சாலையோர வியாபாரிகள் பொதுமக்கள் ஹோட்டல் குறிப்பிட்டு வீடுகள் பகுதியில் செல்லும் பொழுது அதற்குத் தேவையான உணவை அன்புடன் வழங்குவார்கள். அதனை மிகுந்த ஆர்வமுடன் உண்டு ஓய்வெடுத்து வரும். குறிப்பாக பாகலூர் சர்க்கிள் மேம்பாலம் கீழே யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யாமல் ஓய்வெடுத்து தனது வாழ்வை கழித்து வந்த நிலையில், இன்று தாலுகா அலுவலக சாலை ஓரம் உறங்கியபடியே உயிரிழந்தது.
தகவல் அறிந்த அனைத்து பகுதி பொதுமக்களும் இறந்த காளை மாட்டிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். மனிதர்களுக்கு ஈமச்சடங்குகள் செய்வது போலவே இறந்த காளை மாட்டின் சடலத்தை, பிரமாண்ட அலங்காரங்களுடன் பிரதான சாலைகளின் வழியே ஊர்வலமாக எடுத்துச் சென்று, இறுதி சடங்குகள் பொதுமக்கள் சார்பில் செய்யப்பட்டது.