×

மது போதையில் போலீசிடம் ரகளை செய்த பெண்

 

வேலூரில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட இளம் பெண்ணை ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் போலீசார் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தங்கம் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது இந்த திருமணம் மண்டபத்திற்கு மது போதையில் வந்த பெண் ஒருவர் அங்கு வைத்திருந்த பூட்டுகளின் சாவி எடுத்துக்கொண்டு திருமண மண்டப ஊழியர்களிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து திருமண மண்டப ஊழியர் குடியாத்தம் நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த காவல்துறையினர் மது போதையில் ரகளையில் ஈடுபட்டிருந்த  அந்தப் பெண்ணிடம் விசாரணையை மேற்கொண்டனர். போலீசாரிடமும் அந்த பெண் ரகளையில் ஈடுபட்டு தகராறு செய்தார்.

விசாரணையில் அவரது பெயர் அனிதா என்பதும் அவருடைய கணவர் ரமேஷ் என்பதும் இவர்கள் காக்கா தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் தற்போது குடியாத்தம் மீனாட்சி அம்மன் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், இவர்களுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இல்லாத விரக்தியில் மது அருந்தும் பழக்கத்திற்கு அந்த பெண் அடிமையானதாகவும் கூறப்படுகிறது. ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் குடியாத்தம் காவல் துறையினர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்ணை ஆட்டோவில்  அழைத்துச் சென்று  வீட்டில் கொண்டு போய் சேர்த்தனர்.. இளம் பெண் மது போதையில் ரகளை ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது