×

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. 

 

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.  அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (22ஆம் தேதி) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்  என்றும், நாளை மறுநாள் (23ஆம் தேதி) மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.  

அதேநேரம் புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் வடமேற்கு வங்கக்கடலில் ஒடிசா, மேற்கு வங்கம் கடற்கரை பகுதிகளை நோக்கி நகரும் என்றும் ,  புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  புயல் உருவாகி தமிழ்நாடு கடற்பகுதிகளை விட்டு விலகி வடமேற்கு திசையில் ஓடிசா மேற்குவங்கம் நோக்கி நகர உள்ளது எனவும்,  இந்தப் புயல் உருவாகும் பட்சத்தில் கத்தார் நாடு பரிந்துரைத்த டானா (DANA) என்று பெயரிடப்படும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.  ஏற்கனவே இந்தாண்டு வங்கக்கடலில் ரிமால் (REMAL) புயல், அரபிக்கடலில் அஸ்னா (ASNA) புயல் உருவான நிலையில் நடப்பாண்டின் 3வது புயலாகவும், வடகிழக்கு பருவமழைக்கால முதலாவது புயலாகவும் (DANA) உருவாக உள்ளது. 

மேலும்,  இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காணரமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 3நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ள வானிலை மையம்,  இன்று முதல் 3நாட்கள் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.  அத்துடன் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.