×

தந்தையை இழந்தும் சாதித்த மாணவி.. கண்ணீருடன் வைத்த கோரிக்கை.. இயக்குனர் சேரன் செய்த செயல்... 

 


தந்தையை இழந்தும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்துக் காட்டிய மாணவிக்கு இயக்குனர் சேரன் கழிவறை கட்டிக்கொடுத்துள்ளார். 

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து மே 6ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்தத்தேர்வில் ஏராளமான மாணவர்கள் தேர்ச்சி பெற்று உயர்கல்வியை நோக்கி சென்றுள்ளனர். அதில் சிலரது பயணம் சற்று கரடுமுரடானதாகவே இருக்கிறது. ஆம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு  நடந்து கொண்டிருந்தபோதே அப்பாவை இழந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்கிற மாணவி,  487 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார்.  மேற்படிப்பு படிக்க வசதியில்லை, அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை.. எங்கள் வீட்டில் கழிவறை கூட இல்லை என அந்த மாணவி கண்ணீருடன் அளித்த பேட்டி தனியார் ஊடகத்தில் வெளியாகியிருந்தது. மாணவியுன் அவரது தாயும்  கண்ணீருடன் கோரிக்கை வைத்த காட்சிகள் காண்போரையும் கலங்க வைத்தது. 

 

இதனையடுத்து  அந்த மாணவிக்கு உதவ பலரும் முன்வருவதாக தெரிவித்திருந்த நிலையில், பிரபல இயக்குனர் சேரன் அப்போதே, “அந்த தங்கைக்கான முகவரி கிடைத்தால் என்னால் முடிந்த உதவி செய்ய இயலும்... ” என்று தனது எக்ஸ் பக்கத்தில் கேட்டிருந்தார்.  இந்நிலையில் அந்த மாணவியின் வீட்டில் குளியலறையுடன் கூடிய கழிவறை அமைத்துக்கொடுத்துள்ளதாக சேரன் தெரிவித்திருக்கிறார்.  புதிதாக கட்டப்பட்ட கழிவறையின் புகைப்படம் மற்றும் வீடியோக்களையும்  தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், “அந்த தங்கைக்கு கழிவறை வசதியுடன் கூடிய குளிக்கும் அறை கட்டிக்கொடுக்கப்பட்டது..  அவர்களை தொடர்புகொண்டு இது நடத்தி முடிக்க உறுதுணையாக இருந்த தம்பி விருமாண்டிக்கு(க/பெ.ரணசிங்கம் திரைப்படத்தின் இயக்குநர் )  நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.