×

திருப்பதி லட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம்

 

திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யானது தமிழ்நாட்டில் உள்ள ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்படவில்லை என்பது மத்திய உணவு பாதுகாப்புத் துறையின் சோதனையில் தெரியவந்துள்ளது.

ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் மிக குறைந்த விலைக்கு, அதாவது ஒரு கிலோ நெய் ரூ.320 முதல் ரூ.411 என்ற விலையில் நெய்  கொள்முதல் செய்ததாகவும்,  இதனால் லட்டு தரம் மிகவும் குறைந்து போனதாக குற்றச்சாட்டு எழுந்தது.  ஆந்திராவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, சந்திரபாபு நாயுடு முதல்வர்  ஆன பிறகு , திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்படும் நெய்யை பரிசோதனை செய்யுமாறு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார். பின்னர்  குஜராத்தில் உள்ள என்டிடிபி பரிசோதனை மையத்துக்கு கடந்த ஜூலை மாதத்தில் நெய் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வு முடிவில், நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த நெய்யில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றியின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நெய் தமிழ்நாட்டில் உள்ள ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டடது என்றும் தகவல் வெளியானது. 

இந்நிலையில் திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யானது தமிழ்நாட்டில் உள்ள ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்படவில்லை என மத்திய உணவு பாதுகாப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்., ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் தெலுங்கானாவை சேர்ந்த பிரபல நிறுவனத்தில் இருந்து நெய்யை வாங்கியது மத்திய உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய சோதனையில் அம்பலமாகியுள்ளது. தெலுங்கானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது தான் கலப்பட நெய் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்திடம் 4 கன்டெய்னர் நெய்யை ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் வாங்கியது தெரியவந்துள்ளது. இதையடுத்து வைஷ்ணவி நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.