×

ஆன்லைனில் வாங்கிய கடனை கட்ட முடியாததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை 

 

செங்கல்பட்டில் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கிய நபருக்கு கடன் செயலி தரப்பில் அதிக அழுத்தம் அளித்ததாக கூறப்படும் நிலையில், அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தற்போதைய டிஜிட்டல் உலகில், ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை எளிதாக நடக்கிறது. மேலும், கடன் பெறும் வசதியும் சுலபமாகிவிட்டது அதேநேரத்தில், முகநூல் போன்ற செயலிகளில் பதிவிடப்படும் தனியார் கடன் செயலிகளால் அப்பாவிகளிடம் பணம் பறிப்பது அதிகரித்து வருகிறது. அதன்படி, செங்கல்பட்டு அடுத்த அனுமந்த புத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் வயது (27) இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுபாஷினி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது ஆறு மாத கைக்குழந்தை உள்ளது. 

இந்நிலையில் யுவராஜ் செங்கல்பட்டு பகுதியில் உள்ள இருசக்கர வாகன சர்வீஸ் சென்டரில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தார் கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பண தேவைக்காக ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்றுள்ளார் கடனை திருப்பி கட்ட கூறி யுவராஜுக்கு ஆன்லைன் செயலி மூலம் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது இதனால் மன உளைச்சலில் இருந்த யுவராஜ் அவரது வீட்டில் சென்று புடவையால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்பு சம்பவம் குறித்து செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்பு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் 

ஆன்லைன் செயலி மூலம் கடன் பெறுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசும், காவல்துறையினரும் விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் போதும் இது போன்ற சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை எளிதில் காவல் துறையினர் நெருங்க முடிவதில்லை என்கிற தைரியமும் இது போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு காரணமாக அமைகின்றன. எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுத்து இதுபோன்ற செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.