×

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் சோதனை! 90 கி.மீ வேகத்தில் பறந்த ரயில்!

 

ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்தில் 90 கி.மீ வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. தண்டவாளத்தில் அதிர்வுகள் உள்ளதா என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ராமேஸ்வரம் தீவை மண்டபம் நிலப்பரப்புடன் இனைப்பதில் முக்கிய பங்கு வைப்பது பாம்பன் ரயில் பாலம் 1914 பிப்.24ம் தேதி முதல் முதலாக  ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது. 100 வருடங்களுக்கு மேலாக ரயில் போக்குவரத்து சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் பழைய ரயில் பாலம்  கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தூக்கு பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு ரயில் சேவை  நிறுத்தப்பட்டுள்ளது. பழைய பாலத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்துவதற்கு முன்னதாகவே மத்திய அரசு பாம்பன் கடலில் புதிய பாலத்தை கட்டுவது என முடிவு  செய்தது. இதற்காக  550 கோடி செலவில் புதிய பாலம் கட்டும் பணியை  பாம்பன் கடலில் 2.8 கிலோமீட்டர் தொலைவிற்கு கடந்த 2020-ம் ஆண்டு முதல்  கட்டுமான பணிகள் துவங்கி தற்போது பாலம் பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது.

இந்நிலையில், மூன்று ரயில் பெட்டிகள் வைத்து 90 கிலோமீட்டர் வேகத்தில் மண்டபம் முதல் ராமேஸ்வரம் வரை புதிய ரயில் பாலத்தின் வழியாக ரயில் இயக்கி சோதனை நடைபெற்றது.  மீண்டும் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து மண்டபம் வரை இயக்கினர்.  சீறிப்பாய்ந்து ஓடிய ரயிலை பார்த்த பொதுமக்கள், விரைவில் புதிய ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கி பயணம் செய்ய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.