தைலம் டப்பாவை விழுங்கிய இரண்டரை வயது குழந்தை.. விளையாடும் போது ஏற்பட்ட விபரீதம்
திருமங்கலத்தில் இரண்டரை வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய ரூ.2 அமிர்தாஞ்சன் பிளாஸ்டிக் தைல டப்பாவை அரசு மருத்துவர்கள் பத்திரமாக மீட்டனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ரோஜா தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஹசீனாபானு இவருக்கு இரண்டரை வயதில் ஆலியா என்ற பெண் குழந்தை உள்ளது. ஹசீனாபானு வேலைக்கு செல்வதால் குழந்தையை தனது தாய் மெகரசிபானுவிடம் விட்டுச் செல்வது வழக்கம். இதே போல் நேற்று தாயிடம் குழந்தையை விட்டுவிட்டு, ஹசீனாபானு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் மாலை 6 மணி அளவில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கீழே கிடந்த, 2 ரூ அமிர்தாஞ்சன் பிளாஸ்டிக் தைல டப்பாவை எடுத்து வாயில் வைத்தது. அப்போது எதிர்பாராத விதமாக தைல டப்பா தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதனால் குழந்தை அலறியது.
குழந்தையின் அலறல் கேட்டு மெகரசிபானு என்னவென்று பார்த்தபோது, தொண்டைக்குள் தைலடப்பா சிக்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக உறவினர்களை அழைத்து திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு பணியில் இருந்த மருத்துவர் சிவகரன் மற்றும் மருத்துவமனை செவிலியர்கள், உதவியாளர்கள் உதவியுடன் குழந்தை ஆலியாவின் தொண்டையில் சிக்கிய தைல டப்பாவை 15 நிமிடம் போராடி பத்திரமாக வெளியே எடுத்தார். தொண்டைக்கு உள்ளே செல்லாமல் வெளியே சிக்கிக் கொண்டதால் குழந்தை மூர்ச்சையாகவில்லை என தெரிவித்தார். தொண்டையில் சிக்கிய தைல டப்பாவை பத்திரமாக மீட்டு குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவமனை மருத்துவர் சிவகரனுக்கு குழந்தையின் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.