×

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த பெண்! 6 பேரின் உயிரை காத்த உடல் உறுப்புகள்

 

புதுக்கோட்டை அருகே சமயபுரத்திற்கு பாதயாத்திரை செல்லும் பொழுது சாலை விபத்தால் மூளைச் சாவு அடைந்த பெண்மணியின் உடல் உறுப்புக்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானம் செய்யபட்ட நிலையில் அவரது உடலுக்கு தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தினர் அரசு மரியாதை செய்தனர்.

தமிழ்நாடு அரசு கடந்தாண்டு உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்று அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று ஆந்திரா மாநிலத்தில் ஆந்திர அரசும் உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே கடந்த 7ம் தேதி அன்று திருச்சி சமயபுரத்திற்கு பாதை யாத்திரை சென்ற புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் அருகே உள்ள தெற்கு செட்டியாபட்டி கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி என்பவரது மனைவி மாரிகண்ணு(46) சாலை விபத்திற்குள்ளாகி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மகள்கள் மலர், செல்லமணி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்ததின் பேரில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாரிக்கண்ணுவின் உடல் உறுப்புகளான நுரையீரல்கள், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் தானமாக பெறப்பட்ட நிலையில் அந்த உடல் உறுப்புகள் மூலம் ஆறு பேரின் உயிரைக் காக்க பயன்படும் என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய மாரிக்கண்ணுவின் குடும்பத்தினருக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்வர ராஜ்மோகன் நன்றி தெரிவித்த நிலையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதன்படி உடல் உறுப்பு தானம் செய்த மாரிக்கண்ணுவின் உடலுக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து அரசு மரியாதை செலுத்தி மாரி கண்ணுவின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.