திருப்பதி தேவஸ்தான அலுவலகம் முன் மடாதிபதிகள் தர்ணா
திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகம் முன் மடாதிபதிகள் மற்றும் இந்து அமைப்பினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு, மிக குறைந்த விலைக்கு, அதாவது ஒரு கிலோ நெய் ரூ.320 முதல் ரூ.411 என்ற விலையில் நெய் கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தரமற்ற நெய் காரணமாக , லட்டு தரம் மிகவும் குறைந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் ஆந்திராவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆன பிறகு, திருப்பதி லட்டு பிரசாதத்தின் தரம் குறித்த புகாரை கையில் எடுத்தார். இதுகுறித்து பரிசோதனை செய்யுமாறு சந்திரபாபு நாயுடு உத்தரவிட்ட நிலையில், குஜராத்தில் உள்ள என்டிடிபி பரிசோதனை மையத்துக்கு கடந்த ஜூலை மாதத்தில் நெய் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வு முடிவில், நெய்யில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நெய்யில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றியின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகம் முன் மடாதிபதிகள் மற்றும் இந்து அமைப்பினர் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது திருமலையை காப்பாற்றுங்கள், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை காப்பாற்றுங்கள் என முழக்கமிட்டனர். லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தும் நெய்யில் கலப்படம் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர்கள் வலியுறுத்தினர். தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.