சென்னையில் இதுவரை சுமார் 210 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்
சென்னையில் இதுவரை சுமார் 210 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. சேகரிக்கப்படும் பட்டாசு கழிவுகள் உடனுக்குடன் கும்மிடிப்பூண்டி தீங்கு விளைவிக்க கூடிய கழிவுகள் அகற்றும் நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகரில் தீபாவளி பண்டிகை ஒட்டி பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடிய பின் ஆங்காங்கே குவிந்துள்ள பட்டாசு கழிவுகளை நேற்று முதல் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். அவ்வாறு அகற்றப்படும் பட்டாசு கழிவுகள் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குப்பை சேகரிக்கும் இடத்தில் தனியாக சேகரிக்கப்பட்டு அங்கிருந்தே கும்மிடிப்பூண்டியில் உள்ள தீங்கு விளைவிக்க கூடிய கழிவுகளை அகற்றும் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
தெருக்களில் சேர்ந்துள்ள பட்டாசு கழிவுகளை அகற்ற ஒரு மண்டலத்திற்கு இரண்டு வாகனங்களும் குப்பைகளை சேகரிக்கும் இடத்திலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு எடுத்து செல்ல 33 கனரக வாகனங்களும் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் நவம்பர் 11 முதல் 13 ஆம் தேதி வரை 210 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் மட்டும் 152.28 டன் பட்டாசு கழுவுகள் அகற்றப்பட்டுள்ளன.