×

"வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது"- ஐகோர்ட்

 

வாகனங்களில் ஸ்டிக்கர்ஒட்டியிருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர் மற்றும் மருத்துவர் என ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் இருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் கே.ஸ்ரீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மருத்துவர்கள் எந்த விதமான விதி மீறல்களிலும் ஈடுபடுவதில்லை. மருத்துவர் என வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற அறிவிப்பால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பணி நிமித்தமாக அவசரமாக பயணம் மேற்கொள்வதில்  சிரமம் ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது whatsapp சேனலை Follow செய்யுங்கள்:

https://whatsapp.com/channel/0029VaDmE2aGehELVeirsJ2r

இந்த மனு நீதிபதி பி.பி.  பாலாஜி, முன்பு விசாரணைக்கு வந்த போது, மருத்துவ அவசரத்திற்காக செல்லும் மருத்துவர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட விலக்களிக்கலாமே என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் ஸ்டிக்கர் வழங்குவது போல மருத்துவர்களுக்கும் வழங்குவது குறித்து தேசிய மருத்துவ ஆணையத்திடன் கருத்து கேட்கலாமே? என நீதிபதி தெரிவித்தார். இதற்கு அரசுத்தரப்பு மருத்துவ ஆணையத்தையும் வழக்கில் இணைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து தேசிய மருத்துவ ஆணையத்தையும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலையும் வழக்கில் இணைக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதி, இது இடைக்கால உத்தரவு மட்டுமே எனவும் மருத்துவ கவுன்சிலின் வாதத்தை கேட்ட பிறகு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார். ஸ்டிக்கரை மருத்துவர்கள் தவறாக பயன்படுத்தினாலோ அல்லது மருத்துவர் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் வாகனங்கள் சந்தேகிக்கும் முறையில் இருந்தாலோ காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், வாகனத்தின் முன் பக்கம் அல்லது பின் பக்கம் மட்டுமே ஸ்டிக்கர்  ஒட்டியிருக்க வேண்டும் எனவும் நம்பர் பிளேட் உள்ளிட்ட இடங்களில் ஒட்டியிருந்தால் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.