×

நடிகர் தனுஷ் மீது இதுவரை எந்த புகாரும் நடிகர் சங்கத்திற்கு தெரிவிக்கவில்லை- கார்த்தி

 

நடிகர்கள் விஷால் மற்றும் தனுஷ் ஆகியோருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் புதிய படம் நடிக்க கட்டுப்பாடுகள் விதித்த நிலையில், சென்னை தியாகராயர் நகரில் நடிகர் சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பொருளாளர் கார்த்தி , துணை தலைவர்கள் பூச்சி முருகன், மற்றும் கருணாஸ் நேரில் கலந்து ஆலோசித்தனர். மேலும் நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் செயலாளர் விஷால் காணொளி காட்சி வாயிலாக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கார்த்தி, "திரைத்துறையில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் நல்ல உடன்பாட்டில் தொடர்ந்து பணியாற்றுகிறோம். இதற்கு முன் நடிகர் சங்கம் சார்ந்த பிரச்சினையோ, தயாரிப்பாளர் சார்ந்த பிரச்சினையோ எப்போதும் கலந்து ஆலோசித்து இரண்டு பக்கமும் குழுக்கள் அமைத்து தான் முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மாலை தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை தன்னிச்சையாக யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக தலைவரிடமும் செயலாளரிடமும் வீடியோ கான்பரன்ஸில் பேசி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளோம். 

தயாரிப்பாளர் சங்கம் திடீரென எடுத்த முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. ரொம்ப வருத்தம் அளிக்கிறது. இது தொடர்பான அடுத்த தீர்மானங்களை அடுத்த செயற்குழுவில் நிச்சயமாக எடுப்போம். இதுவரை பேசிய விஷயங்கள் ஒவ்வொன்றுக்கும் பதில்கள் அளிக்கப்பட்டு வந்தது. பிரச்சினையையும் தீர்த்து வருகிறோம். ஆனால் இந்த பிரச்சினை குறித்து அவர்கள் அளித்த புகார் எதுவும் எங்களிடம் வரவில்லை. எழுத்துப் பூர்வமாக புகார் எதுவும் வராத நிலையில், திடீரென அவர்கள் அறிக்கையை வெளியிட்டது ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கான விளக்கத்தையும் நாங்கள் எங்கள் அறிக்கையில் கேட்டிருக்கிறோம். நடிகர் தனுஷ் மீதான பிரச்சினை குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம்  அளித்த புகார் எதுவும் எங்களிடம் வரவில்லை.இது தொடர்பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. இது தொடர்பான அடுத்த தீர்மானங்களை அடுத்த செயற்குழுவில் நிச்சயமாக முடிவெடுப்போம்” என்றார்.