நான் எங்கும் ஓடி, ஒளியவில்லை; விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு- மோகன்லால்
பாலியல் புகார்கள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த நீதிபதி ஹேமா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஹேமா கமிட்டியின் அறிக்கை, சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஹேமா கமிட்டி ரிப்போர்ட் வெளியான பின்னர் பல நடிகைகள், தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தற்போது கூறி வருகின்றனர். இதனையடுத்து பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்துள்ளது. அடுத்தடுத்து வரும் பாலியல் புகார்களால் மலையாள திரைப்பட நடிகர் சங்க( AMMA) தலைவர் மோகன்லால் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மோகன்லால், “மலையாள திரையுலகம் பாலிவுட் போல பிரம்மாண்டமானது அல்ல. மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறியுள்ளோம். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை, கேரளாவில் தான் உள்ளேன். தற்போதைய பிரச்சனைக்கு மலையாள திரைப்பட சங்கத்தை மட்டுமே குறை கூறுவதில் நியாயமில்லை. மலையாள திரைப்பட நடிகர் சங்கமான AMMA மீது அவதூறு பரப்ப வேண்டாம். பாலிய. புகார்களால் பெருமை மிகுந்த கேரள சினிமா சிதைந்து போயுள்ளது. மலையாள நடிகர்களை உள்ளடக்கிய அம்மா சங்கத்தில் நான் 2 முறை பொறுப்பில் இருந்துள்ளேன். குழு கலைக்கப்பட்டாலும் சங்கத்தின் செயல்பாடுகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. பணிகள் தொடர்கிறது.
பாலியல் புகார்கள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். தற்போது விசாரணை நடைபெற்றுவருகிறது. தயவு செய்து மலையாள சினிமாவை அழிக்காதீர்கள். சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து மலையாள திரையுலகம் மீண்டு வர அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். ஹேமா கமிட்டி அளித்திருந்த பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் நடந்திருக்கலாம். ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்கிறேன். விசாரணை நடைபெற்றுவருகிறது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பதில் சொல்ல வேண்டியது ஒட்டுமொத்த மலையாள திரையுலகமும்தான். இதுபோன்ற குற்றச்சாட்டுகள் திரைத்துறையில் மட்டுமல்ல, பிற துறைகளிலும் உள்ளது. பாலியல் புகாரால் மலையாள திரையுலகில் உள்ள கடைநிலை தொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடாது” எனக் கூறினார்.