அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான புகாரை சிபிசிஐடிக்கு மாற்றுக- நடிகை சாந்தினி
சென்னை பெசண்ட் நகரைச் சேர்ந்த நடிகை சாந்தினி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "நான் மலேசியாவில் வேலை பார்த்து வந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கினார். பின்னர் கருவை கலைக்குமாறு மிரட்டினார். இது தொடர்பாக அடையாறு காவல் நிலையத்தில் கடந்த 2021 இல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மலேசியா காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ரகுபதி என்பவர் மணிகண்டனின் உறவினர் எனக் கூறி மணிகண்டன் மீதான புகாரை திரும்ப பெற வேண்டும் இல்லையெனில் என்னை உயிரோடு எரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
அதேபோல அதிமுகவைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் தொலைபேசி மூலமாக என்னை தொடர்பு கொண்டு, எனக்கும் மணிகண்டனுக்குமான பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் எனக்கூறி மதுரை வரவழைத்தார். அங்கு மணிகண்டன் என்னை சந்திக்காத நிலையில், ராமநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு மறுநாள் சென்றபோது, அவரது தாயார் அன்னக்கிளி உட்பட நான்கு பெண் ஊழியர்கள், ஓட்டுனர்கள் ராஜா, குரு, விக்னேஷ் உள்ளிட்டோர் என் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர். பின்னர் காவல்துறையினர் என்னை மீட்டு மதுரை மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க, அங்கு சிகிச்சை பெற்றேன்.
இது தொடர்பாக புகார் அளித்த நிலையில் மணிகண்டன் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வழக்கு பதிவு செய்ய விடாமல் தடுத்து விட்டார். பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு ராமநாதபுரம் பி2 பஜார் காவல் நிலையத்தில் 2022 நவம்பர் 18ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் எவ்விதமான முன்னேற்றமும் இன்றி வழக்கு கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள MP,MLA வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்திற்கு விசாரணை மாற்றி பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.