‘திராவிடமும் தமிழ்தேசியமும் ஒன்றுதான்’... விஜய்க்கு ஆதரவாக பேசிய சத்யராஜ்
தமிழ் தேசியம் ஆரியதைத்தான் எதிர்க்கவேண்டுமே தவிர, திராவிடத்தை அல்ல என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
திராவிடமே தமிழர் அரண் என்ற தலைப்பில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சிறப்பு கருத்தரங்கம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற்றது.
இக்கருதரங்கத்தை தலைமையேற்று பேசிய சத்யராஜ் பேசுகையில் சத்யராஜ், “தமிழ் தேசியம் ஆரியதைத்தான் எதிர்க்கவேண்டுமே தவிர , திராவிடத்தை அல்ல. ஈழ விடுதலைக்கு பெரிய உத்வேகம் குடுத்தது திராவிட இயக்கங்கள் தான். திராவிடமும் தமிழ்தேசியமும் ஒன்றுதான் என மேதகு பிரபாகரனே கூறியுள்ளார். நான் 15 வயது இருக்கும் போது முத்தமிழறிஞர் கலைஞரின் பராசக்தி திரைப்பட வனங்கள் கேட்டபோது, தமிழின் மீது ஆர்வம் வந்துவிட்டது. கலைஞர் மீது காதல் வந்துவிட்டது.
திராவிட சித்தாந்தத்தின் தேவைகளை வட மாநில தொழிலாளர்களிடமும் நாம் எடுத்துரைக்க வேண்டும். வட மாநில தொழிலாளர்கள் இங்கே நிறைய பேர் வந்து வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்த மாநிலத்தில் நிச்சயம் சாதிய ஒடுக்கு முறைகளை கண்டிப்பாக அனுபவித்து இருப்பார்கள். உயர் சாதியாக கருதப்படுபவர்கள் யாரும் இங்கே வேலைக்கு வந்து இருக்க மாட்டார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட தலித் அவர்களிடம் ஏன் உங்க மாநிலம் மாதிரி எங்கள் தமிழ் நிலம் இல்லை என்பதை புரியவைக்க வேண்டும். அதற்கு காரணமாக இருக்கும் திராவிட சித்தாந்தத்தை அவர்களிடமும் நாம் எடுத்துச் செல்ல வேண்டும்” என்றார்.