ரிவ்யூங்குற பேர்ல வேணும்னே ஒரு படத்தை தாக்குவது தவறான விஷயம்- 'கங்குவா' குறித்து நடிகர் சத்யராஜ் பேச்சு
திரைப்படம் நல்லா இருக்கு, நல்லா இல்லை என்பதை தாண்டி தனிமனித விமர்சனம் வைக்கக் கூடாது என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் சத்யராஜ், சுனில் சத்யதேவ், நடிகை பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகி வெளியாகி இருக்கும் ஜீப்ரா திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப்படத்தின் இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக், தயாரிப்பாளர் பாலா, நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
ஜீப்ரா படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய சத்யராஜ், “ஜீப்ரா படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைத்து நடிக்கவில்லை. சத்ய தேவ் தமிழ் தெரியலனு சொன்னார். 15 வருடங்களாக தெலுங்கு தெரியாம நடிச்சுகிட்டு இருக்கிறேன். ஆனால் ஈஸ்வர் இந்தப் படத்துல தெலுங்கு பேச வைத்துவிட்டார். இப்ப நம்பிக்கை வந்த பிறகு எல்லா படங்களுக்கும் நான் தான் டப் பன்றேன். சத்ய தேவ் கவலை பட வேண்டாம், அடுத்தப்படத்துக்கு நான் உங்களுக்கு டப் பண்ண ஹெல்ப் (Prompt) பன்றேன்.
நல்ல விமர்சனங்களால் தான் இந்த ஜீப்ரா திரைப்படம் இன்று நல்லபடியாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதேபோன்று சமீப நாட்களாக திரையரங்குகளில் இனி விமர்சனங்கள் செய்யக்கூடாது என தயாரிப்பாளர்கள் திரையரங்குகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஜீப்ரா படம் நல்ல விமர்சனத்தால்தான் வெற்றியடைந்துள்ளது. ஆனால் கங்குவா படம் நல்லா இருக்கு, நல்லா இல்லை என்பதை தாண்டி தனிப்பட்ட முறையில் ரிவ்யூங்குற பேர்ல வேணும்னே ஒரு படத்தை தாக்குவது தவறான விஷயம். படம் பார்க்கும் ரசிகர்களும் மற்றும் பொதுமக்களும் படத்தின் மீது இருக்கக்கூடிய கருத்துக்களைத் தவிர தனிமனிதர்கள் மீது இருக்கும் வெறுப்புகளை படத்தின் மீது சொல்லக்கூடாது” என்றார்.