வயநாடு நிலச்சரிவு நெஞ்சை உலுக்குகிறது - நடிகர் சூர்யா வேதனை..
வயநாடு நிலச்சரிவு சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக நடிகர் சூர்யா வேதனை தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று முன்தினம்( ஜூலை 30) அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலச்சரிவுகளால் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய இடங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதில் சூரல்மலா கிராமமே மண்ணில் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 500 வீடுகள் மண்ணில் புதைந்துவிட்டதாகவும், 1000க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள், கேரள மக்கள், குழந்தைகள் என 4000க்கும்மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு 45 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு நிலவரப்படி வயநாடு நிலச்சரிவில் சிக்கி 270 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயநாட்டை புரட்டிப்போட்டுள்ள நிலச்சரிவின் கோர காட்சிகளும், மீட்பு பணிகளின் போது தோண்ட தோண்ட சடலங்களாக கண்டெடுக்கப்படுவதும், மீட்கப்பட்ட மக்கள் உடமைகள், உறவுகளை இழந்து தவிக்கும் நிலை பார்ப்போரை உடைந்துபோகச் செய்கிறது. இதனையொட்டி நிலச்சரிவு தொடர்பாக இரங்கல் தெரிவித்து வரும் பலரும், கேரள அரசுக்கு நிதியுதவியும் அளித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் சூர்யா வயநாடு நிலச்சரிவு நெஞ்சை உலுக்குவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “வயநாடு நிலச்சரிவு சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது பிரார்த்தனைகள். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும், களத்தில் உள்ள பொது மக்களுக்கு தலைவணங்குகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.