×

“நடிகர் விஜய் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது”

 

மதவாதத்தை எதிர்க்கும் நடிகர் விஜய் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என மகிளா காங்கிரஸ் தலைவி ஹசீனா சையது பேட்டியளித்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் தலைவருமான ராஜீவ்காந்தியின் 80வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இன்று மௌன ஊர்வலம் நடந்தது. இதில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி சையது ஹசீனா சிறப்பு அழைப்பாளராக ஊர்வலத்தில் பங்கேற்றார். போடிநாயக்கனூரில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே தொடங்கி காமராஜர் பஜார், தேவர் சிலை, பேருந்து நிலையம் வழியாக வந்து வ.உ.சி. சிலை அருகே நிறைவடைந்தது. இதில் தேனி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மகிளா காங்கிரஸார் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மகிளா காங்கிரஸ் தலைவி சையது ஹசீனா, “மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு நூறு ரூபாய் நாணயம் வெளியிட்டது இந்திய அரசு தான். அதனால் தான் அந்த விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உடன் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். அதே நேரத்தில் ஆர்எஸ்எஸ் கொள்கையுடன் இருக்கும் பாஜகவை திமுக எப்போதும் எதிர்க்கும். தமிழகத்தில் திமுக உடனான காங்கிரஸ் கூட்டணி சிறப்பாக இருக்கிறது. மேலும் மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட நாணயங்கள் அனைத்திலும் ஹிந்தி மொழி இருக்கிறது, ஆனால் கலைஞரின் நாணயத்தில் மட்டும் தான் தமிழ் மொழி இடம் பெற்றிருக்கிறது. அதனை எடப்பாடி பழனிச்சாமிக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இந்தியாவில் உள்ள பாஜக எம்.பி.க்களில் ஒருவர் கூட சிறுபான்மையினர் இல்லை. ஆனால் காங்கிரஸில் தேசிய தலைவர், பொதுச்செயலாளர் உள்பட 60 சதவீதம் பேர் பட்டியலினத்தவர் உள்ளனர். ஏற்கனவே சிறுபான்மையினரை நசுக்கும் வேலைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது. பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பட்டியலினத்தவர் எந்த மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியாது. மேலும் கடந்த 2008ல் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தியை அப்போது சந்தித்த நடிகர் விஜய், தான் காங்கிரஸில் இணைய வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார். அவருடைய சித்தாந்தம் காங்கிரஸ் மற்றும் மதவாதத்தை எதிர்த்து தான் இருக்கும் என்பதால், வரும் காலங்களில் நடிகர் விஜய் காங்கிரஸூடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. இருந்தாலும் கூட்டணி தொடர்பாக மேலிடம் தான் முடிவெடுக்க வேண்டும்” என்று கூறினார்.