×

 நடிகர் விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படம் இன்று ரிலீஸ்.. 

 

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகர் விஜய்யின் ‘தி கோட்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.   

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்).  ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். மேலும் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், ஜெயராம், யோகி பாபு, லைலா, சினேகா,  பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.  

டி- ஏஜிங் தொழில்நுட்பத்தில் இளம் வயது விஜய் மற்றும் வயதான கதாப்பாத்திரத்தில் விஜய், ஏஐ தொழில்நுட்பம் மூலம் சிறப்புத் தோற்றத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தோன்றவுள்ளது என பல சுவாரசியங்களுடன் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறது தி கோட் திரைப்படம். இப்படம் தமிழ்,தெலுங்கு,  இந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் இன்று திரைக்கு வந்துள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா,  தெலுங்கானாவில் காலை 5 மணிக்கே இப்படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டு விட்டது.  தமிழகத்தில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சியாக ‘தி கோட்’ திரையிடப்பட உள்ளது. 

தமிழகத்தில் 750க்கும் மேற்பட்ட திரையரங்கிலும் இந்தியா முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்கிலும் திரைப்படம் வெளியாகிறது. நடிகர் விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு மற்றும்   சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை தொடர்ந்து வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால் தி கோட் படத்தை காண விஜய் ரசிகர்கள் ஆவலுடன்  காத்திருக்கின்றனர்.