×

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் கணவர் விடுவிப்பு.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.. 

 


சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை எனக்கூறி திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் விடுவித்தது. 

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த 2020 டிசம்பர் 9-ம்தேதி  தற்கொலை செய்துகொண்டார். சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த அவர் அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், மகள் சித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது  தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.  சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என புகார்கள் எழுந்தன. இதனையடுத்து  2020 டிசம்பர்15-ம் தேதி கைது செய்யப்பட்ட ஹேம்நாத், பின்னர் 2021 மார்ச் 2-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.  

இருப்பினும் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.  சின்னத்திரை நடிகை சித்ராவுடன் தொழில் ரீதியாக தொடர்பில் இருந்த அரசியல், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் யார் என்பதை பட்டியலிட்டு, அவர்கள் அனைவரையும் போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வந்து தீவிரமாக  விசாரணை நடத்தினர்.  இதனிடையே , கடந்த 25ம் தேதி சித்ராவின் கணவர் ஹேம்நாத் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், “நானும் என் மனைவி சித்ராவும் சந்தோசமாக வாழ்ந்து வந்தோம். மேலும், என் மனைவி சித்ரா இறந்த உடனே நானும் இறந்து விடலாம் என்ற நோக்கில் இருந்தேன். ஆனால் என் மனைவியை கொலை செய்தது நான் தான் என என்மீது பழி சுமத்தியவர்கள் முன் நான் குற்றம் செய்யாதவன் என்பதை நிருபிக்கவே உயிரோடு இருக்கிறேன்”என தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில்   இந்த வழக்கு விசாரணை திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு  வந்தது. அப்போது   சின்னத்திரை நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் நிரபராதி எனவும், இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக நீதிபதி ரேவதி தீர்ப்பளித்தார். ஹேம்நாத்துக்கு எதிராக உரிய ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்வில்லை எனக்கூறி அவரை விடுவித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.