எனக்கு சில அரசியல்வாதிகள் பாலியல் தொல்லை கொடுத்தனர்- ராதிகா
மலையாள திரையுலகில் பாலியல் புகார் சம்பவங்கள் பூதாகரமாகியுள்ள நிலையில், எனக்கு சில அரசியல்வாதிகள் பாலியல் தொல்லை கொடுத்தனர் என நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.
திரையுலகில் அரங்கேறும் பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ராதிகா, “நடிகைகளின் கேரவன்களில் ரகசிய கேமராக்கள் உள்ளன. நடிகைகள் உடைமாற்றுவது வீடியோ எடுக்கப்படுகிறது. ஒட்டுமொத்த திரைத்துறையிலும் பாலியல் சுரண்டல் உள்ளது. எனக்கு சில அரசியல்வாதிகள் பாலியல் தொல்லை கொடுத்தனர்.
மலையாள படம் ஒன்றின் படப்பிடிப்பின்போது, அங்கிருந்த ஆண்கள் கூட்டமாக அமர்ந்து போனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். நான் அதைப் பார்த்துவிட்டு கடந்து சென்றுவிட்டேன். பிறகு, அதுகுறித்து விசாரித்தபோதுதான், அவர்கள் கேரவனில் ரகசியமாக கேமரா வைத்து, நடிகைகள் உடை மாற்றுவதை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பது எனக்கு தெரிந்தது. இதனால், நான் பயந்துபோய் கேரவனில் உடைகளை மாற்றாமல் ஹோட்டல் அறைக்குச் சென்று உடை மாற்றினேன். இதுகுறித்து சக நடிகைகளுக்கும் சொல்லி எச்சரித்தேன்
திரைத்துறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் நடிகைகள் அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என்று விஷால் கூறியிருப்பது முறையான பதில் அல்ல. இது ஒரு தலைவர் பேசும் பேச்சு கிடையாது. நடிகைகள் குறித்து யூடியூபர் ஒருவர் மிகவும் தரக்குறைவாக பேசியிருப்பதை பார்த்தேன். விஷாலுக்கு தைரியம் இருந்தால் அந்த யூடியூபரை செருப்பால் அடிக்கட்டும். என்னை அழைத்தால் துடைப்பத்தை எடுத்துக்கொண்டு நானும் வருகிறேன்” எனக் கூறினார்.