×

அதானி நிறுவன ஒப்பந்தம்- ரத்து செய்தது கென்யா அரசு

 

அதானி நிறுவன ஒப்பந்தத்தை கென்யா அரசு ரத்து செய்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மின்சார வாரியங்களுக்கு  சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக ரூ.2100 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதை மறைத்து, அமெரிக்காவில் முதலீடு திரட்டியது தொடர்பாக அதானி குழும நிறுவனங்கள் மீதும், அவற்றின் தலைவர் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீதும் அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த வழக்கில் அதானியை கைது செய்ய பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில்,  இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அதானி நிறுவன ஒப்பந்தத்தை கென்யா அரசு ரத்து செய்துள்ளது. கென்யாவில் அதானி நிறுவனம் மேற்கொள்ள இருந்த விமான நிலைய விரிவாக்கம், மின்சார திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கென்யாவின் நைரோபி விமான நிலைய விரிவாக்கத்திற்கு 1.85 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய அதானி நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கு ஈடாக அதானி குழுமத்திற்கு 30 ஆண்டு குத்தகைக்கு விடும் உத்தேச ஒப்பந்தத்திற்கு கென்யா உயர் நீதிமன்றம் தடைவிதித்தது. கென்யா அதிபர் வில்லியம் ரூட்டோ விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான செயல்முறையையும், 
அதானி நிறுவனத்துடன் மின்சார திட்டத்தையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.