மெரினாவில் 5 பேர் உயிரிழப்பு - அதிமுக சார்பில் புகார்
சென்னை மெரினாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 15 லட்சம் மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிகளவிலான மக்கள் கூட்டத்தால் சென்னையே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.
குறிப்பாக காமராஜர் சாலை, அண்ணா சாலை, சந்தோம் சாலை, LB சாலை, ஈவேரா சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை , வாலாஜா சாலை ஆகிய முக்கிய சாலைகளில் மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது. அதேபோல் கடற்கரை முழுவதும் மக்கள் தலைகளாகவெ காணப்பட்டன. வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சி காண வந்த 5 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு , தமிழக அரசு சார்பில் தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை விமானப்படை சாகச நிகழ்ச்சியை பார்வையிட சென்ற மக்களில் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில், திமுக அரசின் நிர்வாகத் தோல்வி குறித்து விரிவான விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் இன்பதுரை புகார் அளித்துள்ளார். புகார் மனுவில், “மெரினாவில் நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்ச்சியை பார்வையிட 15 லட்சம் பேர் கூடுவார்கள் என தெரிந்தும் தமிழக அரசு போதிய முன்னேற்பாடுளை செய்யவில்லை. விமான சாகச நிகழ்வின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,,மேலும் இவ்விவகாரத்தில் மாநில அரசு நிர்வாகத்தின் தோல்வி குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.