×

பெரும்பாலான அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி

 

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு சென்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அவரது மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, “ஆம்ஸ்ட்ராங் படுகொலை மிகுந்த துரதிஷ்டவசமானது,மனவேதனை அடைந்தேன். படுகொலை செய்து விட்டு இந்த கொலையாளிகள் இருசக்கர வாகனத்தில் தப்பி செல்கின்ற காட்சி தொலைக்காட்சிகளில் பார்த்தோம். இந்த கொலை திட்டமிட்டு நடைபெற்று இருப்பதாகத்தான் தெரிய வருகிறது. சிசிடிவி காட்சிகளில் உள்ளவர்களும் கைது செய்யப்பட்டவர்களும் வேறுபட்டு உள்ளனர். சமூகத்தில் எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும் இந்த படுகொலை செயலை செய்தவர்களை சட்டத்தின் முன்னிறுத்தி அவர்களுக்கு கடும் தண்டனையை இந்த அரசு பெற்றுத் தர வேண்டும். குறிப்பாக அண்மைக்காலமாக அரசியல் தலைவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை.

தமிழகத்தில் திருநெல்வேலி காங்கிரஸ் மாவட்ட தலைவர் படுகொலை, சேலத்தில் அதிமுக பகுதி செயலாளர் படுகொலை அதற்கு பிறகு பிஎஸ்பி மாநில கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை இப்படித் தொடர்ந்து ஒரு மாத காலத்தில் படுகொலைகள் அரங்கேறிக் கொண்டுள்ளது. இன்று தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது, அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை ,பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே இந்த அரசு உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன்னிறுத்தி அவர்களுக்கு கடும் தண்டனையை பெற்றுத்தர வேண்டும்.


உண்மை குற்றவாளிகள் எவ்வளவு பெரிய இடத்தில் இருந்தாலும் அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரித்தால் தான் உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய முடியும். இப்படிப்பட்ட படுகொலையை சாதாரணமானவர்களால் செய்திருக்க முடியாது, வழக்கு நடுநிலையுடன் நடைபெற வேண்டும் என்றால் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.