×

"வெற்றி தோல்வி என்பது வேறு, தன்மானம் முக்கியம்"- எடப்பாடி பழனிசாமி

 

அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்த நிலையில் வெற்றி தோல்வி என்பது வேறு, தன்மானம் முக்கியம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அரசுப் பள்ளியில் ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி இருக்கிறார். எதிர்த்துக் கேள்வி கேட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியரையும் கொச்சையாக பேசி இருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசுப் பள்ளியில் மாற்றுத்திறனாளி ஆசிரியரின் மனம் காயப்படும் அளவிற்கு பேசியது கண்டனத்திற்குரியது. சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த மகாவிஷ்ணு திமுக அமைச்சர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.

தமிழகத்தில் விடியா திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. அதிமுக தலைமையை விமர்சிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? மனசாட்சி உள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வெற்றி தோல்வி என்பது வேறு. ஆனால் தன்மானம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.