"என் தலைமையில்தான் அதிமுக செயல்படும்"- எடப்பாடி பழனிசாமி
எங்கள் தலைமையிலான அதிமுகவுக்கு முழு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதிமுக இரண்டாக, மூன்றாக இருக்கிறது என்ற பேச்சுக்கே இடமில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டவர். ஆகவே என் தலைமையில்தான் அதிமுக செயல்படும். அதிமுகவிற்கு தேர்தல் ஆணையம் அனைத்து உரிமைகளையும் வழங்கியுள்ளது. அதிமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு இல்லம் தேடி பதவி வரும். திமுகவில் மூத்தத் தலைவர்கள் இருக்கும்போது உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியா? திமுகவில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கவில்லை. கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும்தான் முதலமைச்சர் பதவி. உதயநிதி துணை முதலமைச்சர் ஆனதால் இனி தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடும். வரும் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். ஒரே இடத்தில் ஆட்சி, அதிகாரம் சிக்கி இருப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள். எங்கள் தலைமையிலான அதிமுகவுக்கு முழு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதிமுக இரண்டாக, மூன்றாக இருக்கிறது என்ற பேச்சுக்கே இடமில்லை.
மழைநீர் வடிகால் பணியில் அரசு மெத்தனமாக செயல்படுகிறது. மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நிபந்தனை அடிப்படையிலேயே செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. செந்தில் பாலாஜிக்கு முதலமைச்சர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். முதலமைச்சரே பாராட்டி வருவதால், அவர் நிபந்தனைகளை கடைப்பிடிப்பாரா? என கேள்வி எழுந்துள்ளது” என்றார்.