×

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.15 குறைக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

 

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி கொண்டே இருக்கிறது. பொதுமக்கள் கஷ்டத்தை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 15 ரூபாய் மத்திய அரசு குறைக்க வேண்டும் என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை புது வண்ணாரப்பேட்டையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 107 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் 10,107 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் நிகழ்ச்சியை அ.தி.மு.க. சிறப்பாக நடத்தி வருகிறது. தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றார்கள். எம்.ஜி.ஆர். பொதுமக்களுக்கு செய்த சேவை காரணமாக மக்கள் மத்தியில் தெய்வமாக உள்ளார். மக்களுக்காக சேவை செய்தவர் எம்.ஜி.ஆர். சில கட்சி கார்ப்பரேட் கடசியாக செயல்படுகிறது. குடும்ப கட்சியாக திமுக செயல்படுகிறது. அ.தி.மு.க.வில் மட்டும் தான் சாமானியர்கள் முதல்வராக பொதுச்செயலாளராக ஆக முடியும். ஆனால் திமுகவில் அப்படி இல்லை. இந்தியாவில் ஜனநாயக முறைப்படி அதிமுக செயல்படுகிறது.

எம்.ஜி.ஆர். மறைந்தாலும் அவர் நடித்த திரைப்பட பாடல்கள் மறையவில்லை. சிறுவயதில் ஏராளமான கஷ்டப்பட்டார். அந்த கஷ்டத்தை தமிழக குழந்தைகள் படக்கூடாது என்பதற்காக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அது இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக திகழ்ந்தது பல மாநில முதல்வர்கள் இதனை பார்த்து அவர்கள் மாநிலத்தில் கொண்டு வந்தார்கள். தனது பாடல்கள் மூலம் மதச்சார்பின்மையை ஏற்படுத்தினார் எம்.ஜி.ஆர். ஏழைகளுக்காக குரல் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து சரித்திரம் படைத்தவர். அதிமுக ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி அடைந்தது தமிழகம்‌. 2016-ம் ஆண்டு வர்தா, கஜா, நிவர் என பல புயல்களை சந்தித்து அதை மீட்டது நாங்கள். மத்திய அரசு பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தி கொண்டே இருக்கிறது. பொதுமக்கள் கஷ்டத்தை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் விலையை லிட்டருக்கு 15 ரூபாய் மத்திய அரசு குறைக்க வேண்டும்” என்றார்.