×

கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் தான் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்- எடப்பாடி பழனிசாமி

 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்ற தலைவர்கள் இருப்பதால் தான், கடந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியமைத்த பாஜக இன்று சரிந்து கூட்டணி கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டிய சூழலுக்கு வந்துள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக பற்றி சில விமர்சனங்களை தெரிவித்துள்ளார். அதிமுக விக்ரவாண்டி இடைத்தேர்தல்  புறக்கணிப்பு என ஏற்கனவே அறிவித்துள்ளது, காரணம் என்ன என்றும்  கூறிவிட்டோம்,  இருப்பினும் வேண்டுமென்றே அதிமுகவை குறைச்சொல்லி திட்டமிட்டு அண்ணாமலை பேசியுள்ளார். இந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தால் அதிமுக மூன்று, அல்லது  நான்காவது இடத்திற்குச் செல்லும் என பேசியுள்ளார்.  அண்ணாமலை மிகவும் படித்தவர், மிகப்பெரிய அரசியல் ஞானி அவரது கணிப்பு அப்படி இருந்துள்ளது. நடந்து முடிந்த  நாடாளுமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில், விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதி வருகிறது, அதில் அதிமுக வேட்பாளர் சுமார் 6,800 வாக்குகள்  மட்டுமே குறைவாக பெற்றுள்ளார். அதிமுக பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.  இடைத்தேர்தல் புறக்கணிக்க பல்வேறு காரணங்களை எடுத்துக் கூறியுள்ளோம். ஆகவே அண்ணாமலையின்  நேற்றைய செய்தி கண்டிக்கத்தக்கது. 

அண்ணாமலை வந்த பின் தமிழகத்தில் பாஜக வளர்ந்ததாக மாய தோற்றத்தை உருவாக்கி உள்ளனர். உண்மை அது அல்ல. 2014 -ல் பல்வேறு கட்சிகள்  கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டனர். 2024 ஆம் ஆண்டு பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தான் தேர்தலை சந்தித்தது.  மேலும் 2014-ல் பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்,  அதிமுக வேட்பாளரை விட 42 ஆயிரம் வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்றார்.  ஆனால் 2024 தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, திமுக வேட்பாளரை விட  1 லட்சம் வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார். அப்படி என்றால் பாஜக எங்கே வளர்ந்துள்ளது? 2014 ல் பாஜக கூட்டணி பெற்ற வாக்கு சதவீதம் 18.80% , தற்போது பாஜக கூட்டணி பெற்றது 18.28 %  ஆக கட்சி வளரவில்லை, 0.52 சதவீத குறைவாக தான் வாக்குகள் பெற்றுள்ளனர். அண்ணாமலை தினமும் பேட்டி கொடுத்து கொண்டு உள்ளார்.  பேட்டியில் மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு வருகிறார்.  அண்ணாமலை மத்திய அரசிடமிருந்து என்ன புதிய திட்டம் பெற்று கொடுத்தார்? எதுவும் கிடையாது. வாயில் வடை சுடுகிறார் அண்ணாமலை. எப்போதுமே பொய் செய்திகளை வெளியிட்டு வருகிறார். மற்ற கட்சிகளை அவதூறாக பேசுவதை தான் அவர் வழக்கமாக கொண்டுள்ளார்.

கோவையில் பொய்யான வாக்குறுதி கொடுத்து வாக்குகளை பெற்றுள்ளார். மத்தியில் பாஜக ஆட்சி தான் உள்ளது. 500 நாட்களில் 100 வாக்குறுதியை  நிறைவேற்றுவாறா? பாஜகவில் இப்படிபட்ட தலைவர் இருப்பதால் தான் 300 இடங்களை வெற்றி பெற்று ஆட்சியமைத்த பாரதிய ஜனதா கட்சி இந்த முறை சறுக்கி கூட்டணி கட்சி மூலம் ஆட்சி அமைத்துள்ளனர், அதனை முதலில் அண்ணாமலை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அண்ணாமலை தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டுமெனபேசுகிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகளை ராமதாஸ் கோருவது அவரது விருப்பம். 

வருவது போவது என அதிமுக கட்சி கடையில் விற்கும் பொருள் இல்லை. அதிமுகவிற்கு சில விதிமுறைகள் உள்ளது அதன் படி தான் கட்சி நடத்துவோம். கட்சிக்கு விரோதமாக ஓபிஎஸ் செயல்பட்டதால்தான் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது அதிமுக பொதுக்குழுவால் எடுக்கப்பட்ட முடிவு. அவர்களை சேர்த்துக்கொள்ளும் எண்ணம் ஒருபோதும் கிடையாது” என்றார்.