×

ஓபிஎஸ் அதிமுகவில் இல்லை, அவரை பற்றி பேச ஒன்றுமில்லை- எடப்பாடி பழனிசாமி

 

ஓபிஎஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர், எனவே அவரைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று ஓபிஎஸ் அணி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அணியில் இருந்து விலகிய சுமார் 500 பேர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஓ.பன்னீர்செல்வம் பற்றி நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஓபிஎஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். எனவே அவரைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை.  இனி அவரைப் பற்றி கேட்க வேண்டாம்.

சென்னை மாநகர காவல் ஆணையர் மாற்றப்பட்டதால்  மட்டும் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று கூறிட முடியாது. காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும், எவ்வித அழுத்தமும்  இல்லாமல் காவல் துறையை செயல்பட அனுமதிக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தானாக தான் சரண் அடைந்து உள்ளனர். யாரும் கைது செய்யப்படவில்லை. இன்றைக்கு பொதுமக்கள், பெண்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை.

தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரை திட்டமிட்டு கொலை அரங்கேறியுள்ளது. அதற்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார். அதிமுக ஆட்சியில்,  சேலம் மாநகரம் வளர்ந்து வரும் நகரம் என்பதால் பாலங்கள் அமைக்கப்பட்டு உடனுக்குடன் திறக்கப்பட்டுள்ளது. அணைமேடு மேம்பாலம்  கட்டி முடிக்கப்பட்டும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் வேண்டும் என்றே தாமதப்படுத்துகிறார்கள். கோவை, நெல்லை மேயர் ராஜினாமா உட்கட்சி சண்டை, பாகம் பிரிப்பது போன்ற சண்டையால் தான் என கருதுகிறேன். காஞ்சிபுரத்தில் கூட இதுபோன்ற நிலைதான் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி படுபாதாளத்தில் போய் விட்டது. அடிப்படை வசதிகள் கூட செய்யப்படவில்லை. வேண்டும் என்றே திட்டமிட்டு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது  திமுக அரசு சிவில் வழக்கினை கிரிமினல் வழக்குப் போல வதந்தியைப் பரப்புகிறார்கள். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட வழக்குப் போட்டுள்ளனர்” என்றார்.