×

சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல் உதயநிதி பேசுகிறார்- ஜெயக்குமார்

 

சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல் உதயநிதி பேசுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “தமிழகத்தில் மின்சார கட்டணம் ஷாக் அடிக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பவே சனாதனத்தை திமுக கையில் எடுத்துள்ளது. திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு பன்மடங்கு அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.. திமுக ஆட்சியில் அனைத்திலும் சீரழிந்த நிலையில்தான் தமிழ்நாடு உள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதிமுக சந்திக்கத் தயார். 

2021 ஆம் ஆண்டு நாங்கள் மட்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் திமுகவை நிரந்தரமாக வனவாசத்திற்கு அனுப்பி இருப்போம். ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டும். தேர்தலை எதிர்கொள்ள எந்த சூழலிலும் அதிமுக தயாராக உள்ளது. திமுகவினரை மக்கள் விரட்டி அடிக்கும் நிலைதான் உள்ளது. சனாதனம் என்றால் என்னவென்றே தெரியாமல் உதயநிதி பேசுகிறார்” எனக் குற்றஞ்சாட்டினார்.