"ஓபிஎஸ்க்கு சாட்டையடியாக உயர்நீதிமன்ற தீர்ப்பு"- கடம்பூர் ராஜூ
அதிமுக கொடி, பெயரை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஓபிஎஸ்க்கு சாட்டையடியாக உயர்நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளதாக கூறினார்.
அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் போன்றவற்றை பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. எத்தனை முறை வழக்கு தொடருவீர்கள்? நேரம் கேட்பீர்கள்? எத்தனை முறை ஒரே வாதத்தை முன்வைப்பீர்கள்? என ஓபிஎஸ் தரப்பை கடிந்துகொண்ட நீதிபதிகள், ஏற்கனவே பல நீதிமன்றங்கள் உங்களது வாதங்களை ஏற்கமறுத்த பின், எப்படி அதிமுக கட்சி பெயரை பயன்படுத்துகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினர். ஏற்கனவே அதிமுக வழக்கு தொடர்பாக நீதிமன்றங்களில் ஓபிஎஸுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், இது அவருக்கு மற்றொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, “அதிமுக கட்சி பெயர், கொடி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாட்டை அடியாக அமைந்துள்ளது. ஆளுநர்கள் அரசுக்கு அப்படியே செவிப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. திமுகவை போல ஆளுநர் மீது விமர்சனம் செய்வது, வழக்கு போடுவது போல எந்த ஆட்சியிலும் இல்லை. இதுதான் திராவிட மாடல் அரசு” என்றார்.