உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி- குடும்ப அரசியலின் உச்சம்: வைகை செல்வன்
அதிமுக பலம் பொருந்திய இயக்கம் இரண்டு கோடி தொண்டர்களை பெற்றுள்ள இயக்கம். நிச்சயமாக வரக்கூடிய தேர்தலில் புது வியூகம் அமைத்து வெற்றி பெறுவோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனகோட்டையில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், “ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஏற்கனவே வரவேற்பு தெரிவித்துள்ளது, ஆனால் தற்போது தான் நாடாளுமன்ற தேர்தல் முடிவு அடைந்துள்ளதால் அது நடைமுறைப்படுத்தும் பொழுது அதிமுக முழுமையான தகவலை தெரிவிக்கும்.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவது குடும்ப அரசியலின் உச்சம், கழகத்தை குடும்பமாக கருதினார் அண்ணா, ஆனால் திமுக குடும்பத்தையே கழகமாக மாற்றி ஆட்சி அதிகாரத்தை அவர்களுக்குள்ளே தக்கவைத்து வருகின்றனர். மறைந்த தலைவர் கலைஞர் கருணாநிதி பிறகு ஸ்டாலின் தற்போது உதயநிதி ஸ்டாலின் என்று தொடர்ச்சியாக கலைஞர் கருணாநிதி குடும்பத்திற்குள்ளேயே அதிகாரம் இருக்கிறது. திமுகவின் சாதாரண தொண்டன் பெரிய தலைவர்கள் வரை எவ்வளவு நபர்கள் இருக்கிறார்கள்... அதில் ஒருவருக்கு கூட துணை முதல்வராக வாய்ப்பு தகுதி இல்லையா? என்பதை நாங்கள் கேட்கின்றோம்.
திருமாவளவன் நடத்தும் மதுவிலக்கு மாநாடு குறித்து ஏற்கனவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து கூறிவிட்டார். இந்த மாநாடு குறித்து திருமாவளவன் செயல்பாடு போக போகத்தான் தெரியும். கூட்டணிக்கு காலங்கள் இருக்கிறது எவ்வளவோ மாற்றங்கள் இருக்கிறது மாற்றம் ஒன்றே மாறாதது. பூரண மதுவிலக்கு சாத்தியம் என்பதை தமிழ்நாட்டில் உறுதிப்படுத்த வேண்டும். 500 கடைகள் மூட வேண்டும் என்ற கருத்து எங்களது அரசில் இருந்தது. அதன்படி மதுக்கடைகளை மூடச் செய்தோம். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி துணையாக நின்றார். ஆனால் திமுக டாஸ்மாக் கடைகளை அதிகளவு தெரிந்துள்ளது. டாஸ்மாக் கடைகள் வேலை நேரத்தில் முன்பக்கமும் வேலை இல்லாத நேரத்தில் பின்பக்கமும் செயல்படும் பாணியை திமுக கடைபிடிக்கிறது. திமுக நினைத்தால் பூரணமது விலக்கை அறிவித்து விடலாம். ஆண்டுதோறும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டே வரலாம். அதை அவர்கள் செய்யவில்லை.
திராவிட சித்தாந்தம் என்று சொன்னால் அதிமுக, திமுக என்ற ரீதியில் தான் மக்கள் பார்ப்பார்கள். அந்த வகையில் அடுத்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தேர்தலுக்குப் பிறகுதான் முழுமையாக தெரியும். 2026 இல் திமுக கூட்டணியை நிச்சயமாக சமாளிப்போம். அதிமுக வெற்றி பெறும். தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய நிர்வாகிகள் தேர்தல் வியூகம் வகுத்து வருகின்றனர்” என்றார்.