×

திமுக துணையோடு மலையேற அண்ணாமலை நினைக்கிறார்- ஜெயக்குமார்

 

விக்ரமன் பட குடும்பப் பாசம்போல திமுகவும், பாஜகவும் உள்ளனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். “முளைத்து மூன்று இலை கூட விடவில்லை அதற்குள் இரட்டை இலையைப் பற்றி அண்ணாமலை பேசுவதா? அதிமுக போட்ட பிச்சையில் சட்டமன்றத்தில் 4 பாஜக எம்.எல்.ஏக்கள் உள்ளனர். சொந்தக் காலும் கிடையாது. செல்வாக்கும் கிடையாது. எதுவுமே இல்லாமல் பாஜக எங்களைப் பார்த்துப் பேசுவது வினோத வேடிக்கையாக உள்ளது. 2026ல் தனியாக நின்று தேர்தலை சந்தித்துப் பாருங்கள்.


தவெக தலைவர் விஜய் கொடி ஏற்றுவது கூட திமுகவிற்கு பயம். விஜய்க்கு எவ்வளவு தடங்கல் கொடுக்க முடியுமோ அவ்வளவு தடங்கல்களை திமுக கொடுக்கிறது. விஜய் கொடி ஏற்றுவது பாதிப்பு ஏற்படும் என்பதால் அவருக்கு திமுக நெருக்கடி கொடுக்கிறது. திமுகவின் சாயம் வெளுத்துப்போய்விட்டது. ஜனநாயக நாட்டில் கொடி ஏற்றுவதற்கு எல்லாருக்கும் உரிமை உள்ளது. போதை பொருள் கடத்தல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கி உள்ளதால் மத்திய அரசுக்கு திமுக சொம்பு தூக்குகிறது. திமுகவும், பாஜகவும் விக்ரமன் படம் போல குடும்ப பாச உறவில் உள்ளனர். திமுகவின் தோழமைக் கட்சிகள் கூட வெறுக்கும் நிலை உருவாகியுள்ளது.  திமுக - பாஜக இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சி எம்பிக்களின் விருந்திற்கு ஜெபி நட்டா சிறப்பு விருந்தினர்.

அதிமுகவின் பெருமையை சீரழிப்பதே அண்ணாமலையின் நோக்கம். திமுக துணையோடு மலையேற அண்ணாமலை நினைக்கிறார்” என்றார்.