மா.சு. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஸ்டாலினின் PA ஆகலாம்- ஜெயக்குமார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஆயுதத்துடன் ஒருவர் மருத்துவமனைக்கு வருகிறார். அவரை ஏன் பரிசோதிக்கவில்லை. MCI பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது. அதில் மருத்துவர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு குறித்து விதித்துள்ள விதிமுறைகள் முறையே பின்பற்றப்படவில்லை. இந்த ஆட்சியில் மருத்துவர்கள் உள்ளிட்ட யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மக்கள் நிம்மதியாக சென்று நிம்மதியாக வர முடியவில்லை. சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. மருத்துவமனைக்கு கருணாநிதி பெயர் மட்டும் வைத்தால் போதுமா?
விதிகள் படி சட்டத்தின் படி பாதுகாப்பை ஸ்டாலின் அரசு வழங்கவில்லை. எதிர்காலத்தில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடக்காத வண்ணம் பாதுகாப்பு வழங்க வேண்டும். அமைச்சர் மா.சு பதவியை ராஜினாமா செய்து விட்டு ஸ்டாலினின் P A வாக வைத்து கொண்டால் தமிழ்நாடு மருத்துவ துறை தப்பிக்கும்" என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், "காது உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்துள்ளார். மூத்த மருத்துவர். நல்ல பரிச்சயமான மருத்துவர். அவருக்கு இதய சிகிச்சை வழங்கப்பட்டு பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டு இருப்பவர். நோயாளிகள் ரத்த வெள்ளத்தில் வரும் மருத்துவமனையில் உயிர் காக்கும் மருத்துவர் ரத்த வெள்ளத்தில் உள்ளார். தொடர் நிகழ்வாக குற்றசம்பவங்கள் நடைபெற்று வருகிறது. துணை முதல்வர், அமைச்சர் மா.சு வந்து சென்ற பின்னரும் மருத்துவர்கள் சாலையில் அமர்ந்து போராடி வருகின்றனர் என்பது இந்த அரசு மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை காட்டுகிறது. எதார்த்தமாக இந்த சம்பவம் நடைபெறவில்லை. திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த சிஸ்டம் ஃபெயிலியர்" என தெரிவித்தார்.