×

வாக்காளர் பட்டியல் முழுவதும் குளறுபடி- ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு

 

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற வாக்காளர் பட்டியலிலும் குளறுபடி காணப்படுவதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையரகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி/ஆணையர் தலைமையில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பட்டியல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசிய ஜெயக்குமார், “சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய அளவில் குளறுபடிகள் உள்ளதாகவும், பட்டியலில் பெயர் இருந்தும் பூத் ஸ்லிப் அளிக்கப்பட்டும் உள்ளே இருக்கும் பட்டியலில் பெயர் நீக்கப்பட்ட காரணத்தால் நாடாளுமன்ற தேர்தலில் பலரால் வாக்களிக்க முடியவில்லை. தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற முடியாமல் மக்கள் வேதனையுடன் சென்றதையும் பல இடங்களில் அதிகாரிகளுடன் சரியான பதில் கேட்டு முறையிட்டனர்.

27.3.2024-யை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெறுகையில் மேற்கண்ட பிரச்சினைகளை தேர்தல் ஆணைய அலுவலர்கள் கணக்கில் கொள்ள வேண்டும். அலுவலர்கள் மூலம் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை பிழை இல்லாமல் நேரில் சரிபார்த்து உறுதிப்படுத்த வேண்டும். கடந்த தேர்தலில் நீக்கப்பட்டோருடைய பட்டியலை நீக்கப்பட்டதற்கான சரியான காரணங்களுடன் வெளியிட வேண்டும்.

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட 16 தொகுதிகளுக்குமான வாக்காளர் பட்டியலை எந்தவித குளறுபடிகளும் இன்றி தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். இதை தேர்தல் அலுவவர்கள் முறையாக சரிபார்க்க வேண்டும். இந்த முறையும் தேர்தல் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்பட்டால் அதிமுக நீதிமன்றத்திற்கு செல்ல நேரிடும்” என்றார்.