அதிமுகவில் பழனிசாமிக்கு பிறகு யார்?- கேபி முனுசாமி பரபரப்பு தகவல்
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகள் செயல்பாடு உறுப்பினர் அட்டை வழங்குவது, பூத் கமிட்டி அமைப்பது குறித்த கள ஆய்வு கூட்டமானது மாநகர் மாவட்ட செயலாளர் அப்பு தலைமையில் நடைபெற்றது. வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்பபிரிவு செயலாளர் ஜனனீ பி.சதீஷ்குமார், மாவட்ட பொருளாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து, அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பேசுகையில், "அதிமுக ஒற்றுமையுடன் இருந்து 2026 ஆம் ஆண்டு தேர்தலில் ஒவ்வொரு இடத்திலும் அதிமுக வேகமாக உறுதியாக இருந்தால் எல்லா கட்சியும் நம்மைத் தேடி வரும். நாம் பலமாக இருந்தால் கூட்டணி நம்மை தேடி வரும். நாம் தேடி போக வேண்டிய அவசியமில்லை.உழைப்பு கடுமையாக இருக்க வேண்டும் கட்சி உறுப்பினர்களுக்கான அடையான அட்டை அனைவருக்கும் சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும். நாங்கள் எல்லாம் மூத்த குடிமக்களுக்கு ஆகி விட்டோம். கட்சி தொடங்கி 50 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால், இளைஞர்களுக்கு கட்சியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது. எம்.ஜி.ஆர் யாரையும் அடையாளம் காட்டவில்லை, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு எடப்பாடி யாரை பொதுசெயலாளராக அறிவித்தார்கள். ஒன்றரை கோடி தொண்டர்கள் ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி பதவிக்கு வந்துள்ளார். அண்ணா திமுகவில் வாரிசு அரசியல் இல்லை. எடப்பாடி பழனிச்சாமிக்கு பிறகு முனுசாமி, கந்தசாமி போன்றவர்கள் பதவிக்கு வரலாம். அதே போல் அதிமுகவை வழி நடத்துபவர்கள் இங்குள்ள நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர், கிளை செயலாளர் போன்றோர் தான். காட்பாடி, வேலூர் என இரண்டு தொகுதியும் 2026 எடப்பாடி முதலமைச்சராக வெற்றியைத் தேடித் தர வேண்டும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கி இருக்கிறோம்" என பேசினார்.