×

அரசியல் பழிவாங்க தான் வழக்கு- எம்.ஆர்.விஜயபாஸ்கர்

 

எனது கைதின் பின்னணியில் கரூர் தி.மு.க.வின் முக்கிய பிரமுகர் உள்ளார்.. அரசியல் பழிவாங்க தான் வழக்கு தொடரப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி  ஆவணங்கள் மூலம் தனது ஆதரவாளர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்தாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் கடந்த 16ஆம் தேதி கைது செய்யப்பட்ட எம்.ஆர். விஜயபாஸ்கர் 15 நாள் நீதிமன்ற காவலில் திருச்சி சிறையில் இருந்தார். நிலத்தை பறிகொடுத்த பிரகாஷ் என்பவர் வாங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரில்  எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கோரி கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனுதாக்கல் செய்த நிலையில், நேற்று நள்ளிரவு ஜாமீன் வழங்கப்பட்டது.

வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  எம்.ஆர்.விஜயபாஸ்கர், “எனது கைதின் பின்னணியில் கரூர் தி.மு.க.வின் முக்கிய பிரமுகர் உள்ளார்.. கையாலாகாத திமுக அரசு முழுக்க, முழுக்க  அரசியல் பழிவாங்க தான் இந்த வழக்கை போட்டுள்ளது. இதற்கு முன் என் மீது எந்த வழக்கும் இல்லை. எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அறத்தை நிலைநாட்டி நீதியின் வழி வெளி வருவோம். கட்சியில் எனக்கு ஆதரவு கொடுத்த நிர்வாகிகள், வழக்கறிஞர்களுக்கு நன்றி! என்னை சிறைக்குள் தள்ள 2 மாதங்களாக ஒரு குழு பணியாற்றியுள்ளது” என்றார்.