×

முதல்வர் தனி கவனம் செலுத்தி மக்களை வெள்ள அபாயத்திலிருந்து காக்க வேண்டும்- ஓபிஎஸ்

 

நாளை முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை நிலையம் அறிவித்துள்ள நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, மக்களை வெள்ள அபாயத்திலிருந்து காக்க வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ““வெள்ளம் வரும் முன் அணை போடு” என்ற பழமொழிக்கேற்ப, பருவமழை துவங்குவதற்கு முன்பே, குளங்களை தூர்வாருதல், வடிகால் பணிகளை மேற்கொள்ளுதல், பாதாளச் சாக்கடைத் திட்டங்களை விரைந்து முடித்தல், சாலைகளில் உள்ள பள்ளங்களை மூடுதல் அல்லது பள்ளத்தைச் சுற்றி வேலி போட்டு பெயர் பலகை வைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு. 

இதன் அடிப்படையில், அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டுவிட்டதாகவும், வடகிழக்கு பருவமழையை எதிர்க்கொள்ளத் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு விட்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இருப்பினும், கள நிலவரம் இதற்கு முரணாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.  உதாரணமாக, ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெய்யும் மழை நீரை பருத்திப்பட்டு ஏரிக்கு கொண்டுபோய் சேர்க்கும் இணைப்புக் கால்வாய் தூர்வாரப்படவில்லை என்றும், இதன் ஒரு பகுதி பிளாஸ்டிக் மற்றும் மரப் பொருட்களினால் அடைக்கப்பட்டு உள்ளதாகவும், ஒரு மாதத்திற்கு முன்பே இதுகுறித்து அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்தும், நேற்று வரை தூர் எடுக்கப்படவில்லை என்றும், இந்த ஆண்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்றும், அண்மையில் திறக்கப்பட்ட சேக்காடு சுரங்கப்பாதையில் தண்ணீர் நிரம்பி உள்ளதாகவும், இங்கிருந்து தண்ணீரை வில்லிஞ்சியம்பாக்கம் ஏரி அல்லது சேக்காடு ஏரிக்கு எடுத்துச் செல்ல சரியான கால்வாய் அமைக்கப்படவில்லை என்றும், ஏரிகள் தூர்வாரப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

இதேபோன்று, கொசஸ்தலையாறு பேசின் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகளை கொண்ட அம்பத்தூரில் வெள்ள அபாயம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும், அம்பத்தூர் ஏரியிலிருந்து கொரட்டூர் ஏரிக்குச் செல்லும் கால்வாய் இணைப்பு தூர்வாரப்படாததன் காரணமாக, அப்பகுதியில் உள்ள வீடுகள் மழையில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாகவும், இந்தப் பணிகள் உடனடியாக முடிக்கப்படவில்லை என்றால் அம்பத்தூர் பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருப்பதாகவும், பல இடங்களில் பள்ளங்கள் மூடாத நிலை உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. 

நாளை முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை நிலையம் அறிவித்துள்ள நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, மக்களை வெள்ள அபாயத்திலிருந்து காக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.