×

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசான எடப்பாடிக்கு மட்டுமே இரட்டை இலை சொந்தம்- பொன்னையன்

 

இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசான எடப்பாடிக்கு மட்டுமே இரட்டை இலை சொந்தம், யாரும் உரிமை கூற முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியுள்ளார்.


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி  திருவொற்றியூர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  குப்பன் தலைமையில் தேரடி சன்னதி தெருவில் 500-க்கும் மேற்பட்டோருக்கு உணவு, புடவை, வேட்டி உள்ளிட்ட நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கலந்து கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன்னையன், “எம்ஜிஆரால் துவக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனி சொத்து இரட்டை இலை சின்னம். எம்ஜிஆரின் அரசியல் வாரிசு ஜெயலலிதாவின் தனி சொத்து இரட்டை இலை. இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது, எம்ஜிஆர், ஜெயலலிதாவின் அரசியல் வாரிசான எடப்பாடிக்கு மட்டுமே இரட்டை இலை சொந்தம், யாரும் உரிமை கூற முடியாது. சட்டங்கள் ஒன்றும் செய்ய முடியாது. 2026-ல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இரட்டை இலை சின்னம் கண்டிப்பாக வெற்றி பெறும், அதிமுக ஆட்சி மலரும். 

இரட்டை இலையை பொருத்தவரைக்கும் ஒரு கட்சியினுடைய சின்னம் அதிகப்படியான உறுப்பினர்களுக்கு சொந்தமானது. ஒன்றிய அளவிலே நகர அளவிலும், ஊராட்சி அளவிலும், கிராம அளவிலும் தேர்தலில் ஓபிஎஸ்யை கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்துநீக்க வேண்டும் என்ற முடிவெடுத்துள்ளனர். இது நீதிமன்றத்திற்கு தெரியாது, தேர்தல் ஆணையம் தெளிவான முடிவை சொல்லும். சசிகலா, தினகரன், ஓபிஎஸ் மட்டும் அல்ல... வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், பிரபாகர் உள்ளிட்ட இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரையும் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களை அதிமுகவில் இணைக்கக் கூடாது எந்தக் காரணத்திற்காகவும்  இணைக்க கூடாது என்று தொண்டர்கள்  முடிவு செய்து விட்டார்கள்” என்றார்.