×

பட்டாசு கடை விற்பனைக்கு உரிமம் வழங்கப்படாவிட்டால் அதிமுக போராட்டம் நடத்தும்- ராஜேந்திர பாலாஜி

 

பட்டாசு கடை விற்பனைக்கு உரிமம் வழங்கப்படாவிட்டால் அதிமுக போராட்டம் நடத்தும் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சிவகாசி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் தலைமை கழக பொறுப்பாளர் ஜான் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “தீபாவளி நேரம் மக்கள் அனைவரும் போனஸ் தொகை பெற்று ஜவுளி போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கும் வேளையில் கூட, அதிமுக தொண்டர்கள் ஆலோசனைக் கூட்டத்தின் மூலமாக தலைமை கழக உத்தரவை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.  

வாக்குச்சாவடி முகவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கமிட்டியானது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு மட்டுமல்ல, 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும், அதற்கு பின்பாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தலுக்கும், அதிமுக வளர்ச்சிக்கும் பயன்படும். ஒவ்வொரு அதிமுக தொண்டனின் வியர்வையும் அதிமுகவின் ஆணிவேருக்கு சென்று இன்றைய தினம் அதிமுக விருச்சிகமாக மாறி ஆலமரமாக வளர்ந்துள்ளது. இன்றைய தினம் எடப்பாடி என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்ன முடிவு எடுக்கப் போகிறார்? அதிமுக யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது? என்பது குறித்து தான் பேசப்பட்டு விவாதம் நடக்கிறது. 

சிறுபான்மையினர்களின் வாக்குகளை அதிமுக அள்ளி விடுமோ... சிறுபான்மை மக்களின் ஓட்டு நம்மை விட்டு போய் விடுமோ என இன்றைய தினம் திமுக பயப்படுகிறது. தற்போது வெற்றி நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. நாம் கடமையை சரியாக செய்தால் நமக்கு 100% அல்ல, ஆயிரம் சதவீதம் வெற்றி நிச்சயம் கிடைக்கும். அதனை நாம் சரியாக தக்க வைத்துக் கொள்ள வேண்டும். தொண்டர்கள் ஒரு சொட்டு வியர்வை சிந்தினால் நான் அவர்களுக்காக 100 சொட்டு வியர்வை சிந்த தயாராக உள்ளேன். அதிமுக தொண்டர்கள் சாலைகளில் தலைநிமிர்ந்து நடமாட எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும். தற்போது நம் இலக்கு வெற்றி தான். தொண்டர்களாக நீங்கள் உங்களின் ஒத்துழைப்பையும், உழைப்பையும் தாருங்கள். உங்களின் வளர்ச்சியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். தொண்டர்களுக்குரிய மரியாதையை நாங்கள் நிச்சயம் தருவோம். 

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சமயத்தில் கூட தமிழகத்தில் உள்ள பட்டாசு கடைகளுக்கு விற்பனைக்கான உரிமம் வழங்கப்படவில்லை. ஆதிமுக ஆட்சியின் போது 15 நாட்களுக்கு முன்பாகவே தற்காலிக பட்டாசு கடைகளுக்கு ண்டான அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆட்சி தூங்குகிறதா? இந்த ஆட்சிக்கு ஆப்படி க்க ஒட்டுமொத்தமாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு வெற்றி பெற செய்ய விலை போகாத விசுவாசமானவர்களாக நாம் இருக்க வேண்டும். தற்காலிக பட்டாசு கடைகளுக்குண்டான உரிமத்தை உடனடியாக வழங்கப்படாவிட்டால் அதிமுக சார்பாக மிகப்பெரிய போராட்டம் நடத்தி இந்த ஆட்சியின் கதவுகள் தட்டப்படும். திமுக ஆட்சியால் தமிழகத்திற்கு எந்த விமோசனமும் கிடையாது. சரியான வாக்குச் சாவடி முகவர்களை தேர்ந்தெடுத்து செயல்பட்டால் 10 ஆண்டுகள் என்ன 100 ஆண்டுகள் அதிமுகவை ஆட்சியில் அமர வைக்கலாம்” என்றார்.