×

அதிமுகவின் வெற்றி பெண்கள் கையில்தான் உள்ளது- செம்மலை

 

அதிமுகவின் வெற்றி பெண்கள் கையில்தான் உள்ளது என அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் மதுரை மாநகர் மாவட்ட கழகத்திற்கான கள ஆய்வுக் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் அரங்கில் துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன், அமைப்பு செயலாளர் செம்மலை, மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நத்தம் விஸ்வநாதன், செம்மலை முன்னிலையில் அதிமுகவினரிடையே கைகலப்பு ஏற்பட்டது.

கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை, “அதிமுக உயிரோட்டமுள்ள இயக்கம் என்பதை நிரூபிக்கும் வகையில் கட்சியில் இளைஞர்களை அதிகளவில் சேர்க்க வேண்டும். அதிமுகவின் வெற்றி பெண்கள் கையில்தான் உள்ளது. திமுக அரசு வரி என்ற பெயரில் நம்மிடம் இருந்து மாதம் 10 ஆயிரம் ரூபாயை அபகரித்துகொண்டு, மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் 1000 ரூபாயை பிச்சை போடுவதுபோல் போடுகிறார்கள்” என்றார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த் செம்மலை அளித்த பேட்டியில்,"எந்த மோதலும் இல்லை. அதிமுகவில் பிரச்சனை இருப்பது போல பூதாகரமாக்க முயல்கின்றனர். இது மிகைப்படுத்தப்பட்ட கற்பனை. அதிமுகவில் சலசலப்பு இல்லை. கட்சியினரிடம் பணி புரிவதில் போட்டி உள்ளது அவ்வளவுதான். கட்சியினர் பேசுவதற்கு அனுமதி கேட்டனர், அதை தருவதாக சொன்னோம். பிரச்சனை முடிந்து விட்டது. கள ஆய்வு முடிந்தவுடன் வாய்ப்பு தருவதாக சொன்னோம், அதற்குள் சிலர் எழுப்பிய சத்தத்தை பெரிதாக்கி விட்டனர்"  என்றார்.