×

அதிமுகவின் 52-ம் ஆண்டு தொடக்க விழா- நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

 

அ.தி.மு.க.வின் 52-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி மஞ்சுவிரட்டுக்கு அனுமதி கேட்ட மனு தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


சிவகங்கை மாவட்டம் ஏரியூரைச் சேர்ந்த பிரமுகர் பிரபு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, “எங்கள் பகுதி அ.தி.மு.க. நிர்வாகியாக உள்ளேன். அ.தி.மு.க.வின் 52-வது ஆண்டு விழாவையொட்டி, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா திருக்கோஷ்டியூரில் வருகிற 11-ந்தேதி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை நடத்த கட்சியினரும்,  கிராமத்தினர் சார்பிலும் ஏற்பாடு செய்து வருகிறோம். இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், எந்தவிதமான சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாத வகையில்  போட்டி நடத்த அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து திருப்பத்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதை ரத்து செய்து, வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதிக்கும்படி உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்துவது தொடர்பான அரசாணையில் மனுதாரர் கிராமம் இடம்பெறவில்லை. மேலும் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை மட்டுமே இந்த போட்டிகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மனுதாரர் மனு நிராகரிக்கப்பட்டது என்றார்.

விசாரணை முடிவில், ஜல்லிக்கட்டு அரசாணையில் மனுதாரர் பகுதி இடம் பெறவில்லை. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனுதாரர் முறையிட்டு இருக்க வேண்டும். அந்த வகையில் மனுதாரர் தரப்பினர் சிவகங்கை மாவட்ட கலெக்டரிடம் முறையிடலாம் எனக்கூறி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.