×

அதிமுக கவுன்சிலர்கள் டிச.3-ல் உண்ணாவிரதப் போராட்டம்..!

 

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சொத்து வரி உயர்வு, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டண உயர்வு, ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வு, பலமடங்கு தொழில் வரி உயர்வு, வணிக நிறுவனங்களிடம் வசூலிக்கும் வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற பல்வேறு வரி மற்றும் கட்டணச் சுமைகளை திரும்பப் பெறுவதற்காக திருப்பூர் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும், கழகக் கவுன்சிலர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும்; வரி உயர்வை அறிவித்த மக்கள் விரோத ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கவுன்சிலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற உள்ளது.

நிர்வாகத் திறனற்ற ஸ்டாலினின் விடியா திமுக அரசு, ஆட்சிக்கு வந்த உடனேயே சொத்து வரி உயர்வு, குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் கட்டணம் உயர்வு, குப்பை வரி விதித்தல் என்று பல்வேறு கட்டண உயர்வுகளை தமிழக மக்களின் தலையில் சுமத்தியதைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், சர்வாதிகார ஸ்டாலினின் திமுக அரசு, இனி ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படும் என்பதுடன், சொத்து வரி உயர்த்தப்படும் போதெல்லாம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புக் கட்டண உயர்வு, குப்பை வரி உயர்வு மற்றும் ஏனைய மறைமுக வரி உயர்வுகளையும் அறிவித்து, அதன்படி மூன்றாண்டுகளில் இரண்டாம் முறையாக கடுமையாக உயர்த்தப்பட்ட வரி உயர்வு இந்த ஆண்டுமுதல் வசூலிக்கப்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் எந்தவித எதிர்ப்பையும் கண்டுகொள்ளாத மக்கள் விரோத ஸ்டாலினின் திமுக அரசு பல்வேறு வரி உயர்வுகள் தவிர, அனைத்து விதமான பதிவுக் கட்டணங்கள் மற்றும் அரசு கட்டணங்கள் பல மடங்கு உயர்வு, பால், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு, மூன்று முறை மின்கட்டண உயர்வு என்று பல்வேறு வரிச் சுமைகளையும், கட்டண உயர்வுகளையும் தமிழக மக்களின் தலையில் சுமத்தி வருகிறது.

இதுதவிர, நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின் திமுக அரசு, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தொழில் வரியை பல மடங்கு உயர்த்தியுள்ளது. மேலும், அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், வாடகைக் கட்டடங்களில் இயங்கும் வணிக நிறுவனங்களுக்கான வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது.

இவ்வாறு தமிழக மக்களை கடும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள, மிக மிகக் கடுமையாக உயர்த்தப்பட்ட அனைத்து உள்ளாட்சி வரி மற்றும் கட்டணங்களையும், வணிக நிறுவனங்களுக்கான வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரியையும், பலமடங்கு தொழில்வரி உயர்வையும் ரத்து செய்யும் தீர்மானத்தை, திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று கழகக் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதனை, திமுக அரசின் மேயர் ஏற்காமல், தொடர்ந்து கூட்டத்தை நடத்தி உரிய விவாதங்கள் இன்றி அனைத்துத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக ‘ஆல்பாஸ்’ என்று கூறியதாகவும், இச்செயலைக் கண்டித்து மாமன்றக் கூட்ட அரங்கில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாமன்ற உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து, தலையில் துண்டை போட்டுக்கொண்டு தர்ணா போராட்டம் நடத்தி உள்ளனர். இதனைக் கண்ட மாநகராட்சி மேயர் மற்றும் நிர்வாகம் உடனடியாக மாமன்றத்தில் கூட்டம் முடிவடைந்தது எனக் கூறி கூட்ட அரங்கை விட்டு வெளியேறி உள்ளனர்.

தொடர்ந்து, கழக மாமன்ற உறுப்பினர்கள், மக்கள் விரோத ஸ்டாலினின் திமுக அரசையும், திருப்பூர் மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார்கள். பொதுமக்கள் நலனை முன்னிறுத்தி அறப்போராட்டத்தில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்ளிட்ட 16 கழக மாமன்ற உறுப்பினர்களை, திமுக அரசின் காவல் துறை கைது செய்ததைக் கண்டித்து வெளியிடப்பட்ட எனது கண்டன அறிக்கையினை அடுத்து மாமன்ற உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஸ்டாலினின் மக்கள் விரோத திமுக அரசையும், திருப்பூர் மாநகராட்சியின் ஜனநாயக விரோதப் போக்கையும் கண்டித்து, திருப்பூர் மாநகராட்சியின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கவுன்சிலர்கள் 3.12.2024 – செவ்வாய்க்கிழமை அன்று, காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை, திருப்பூர் மாநகராட்சி மாமன்ற கழக குழுத் தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில், கழகத்தைச் சேர்ந்த 17 மாமன்ற உறுப்பினர்களும், கழக நிர்வாகிகளும் கலந்துகொள்ளும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகர பகுதிக் கழகச் செயலாளர்கள், வட்டக் கழகச் செயலாளர்கள், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஸ்டாலினின் திமுக அரசைக் கண்டித்தும்; மக்கள் நலனை முன்வைத்தும் நடைபெற உள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், குறிப்பாக திருப்பூர் மாநகரத்தைச் சேர்ந்த அனைத்து வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள், வியாபாரப் பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்’ என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.