×

அதிமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது..

 

அதிமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக தோல்வியை தழுவியது. அதிலும் சில தொகுதிகளில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் தொகுதி வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டங்களில் வேட்பாளர்கள் தேர்வில் குளறுபடி, தேர்தல் பணிகளில் ஒருங்கிணைப்பின்மை, உட்கட்சி பூசல் என பல்வேறு புகார்களை கட்சி நிர்வாகிகள் தெரிவித்தாக தகவல்கள் வெளியானது. அத்துடன் கட்சியை பலப்படுத்த பிரிந்திருக்கும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும்,  தொடர் தேர்தல் தோல்விகளுக்கு காரணமான மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சில நிர்வாகிகள்  வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து கட்சிக்குள் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் விதமாக ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.   பின்னர் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதோடு,   16 ஆம் தேதி(இன்று)அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  அதன்படி கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் ஹுசேன் தலைமையில்  இன்று அவசர செயற்குழு கூட்டம் கூடுகிறது.   

கட்சியை பலப்படுத்தும் வகையில்  அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்டங்களை நூறுக்கு மேல் அதிகரிப்பது குறித்தும், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் விதத்தில் தேர்தல் பணிக்குழு அமைப்பது, கட்சியில் இளைஞர்கள் மற்றும் பெண்களை அதிக அளவில் சேர்ப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன்  சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதை பொருள் புழக்கம், விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, ஃபார்முலா 4 கார் ரேஸ் உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.