×

“அதிமுக தொண்டர்களிடம் பேசுங்கள்... தலைவர்களுக்குள் பேசிக்கொண்டு இருக்காதீர்கள்”- கும்பகோணத்தில் மோதல்

 

கும்பகோணத்தில் இன்று நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, அதிமுக முன்னாள் கவுன்சிலர் அம்பிகாபதி தொண்டர்களில் மனக்குமுறல்கள் அதிகம் உள்ளது, தொண்டர்களிடம் கருத்து கேளுங்கள் என சீனிவாசனிடம் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக கள ஆய்வுக்கூட்டம் இன்று கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி ஆகியோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் சீனிவாசன் பேச முற்பட்டபோது, அவரை பேசவிடாமல் தடுத்து, அதிமுக முன்னாள் கவுன்சிலர் அம்பிகாபதி தொண்டர்களிடம் மனக்குமுறல்கள் உள்ளது, அதனை தீர்த்து விட்டு பிறகு கூட்டத்தில் பேசுங்கள் என முறையிட்டார். 

உடனே அங்கிருந்த மாவட்ட செயலாளர் பாரதி மோகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அம்பிகாபதியை மேற்கொண்டு பேச விடாமல் மேடையை விட்டு கீழே இறக்கி மண்டபத்தை விட்டு வெளியேற்றினர். மேடையை விட்டு கீழே இறக்கப்பட்ட அம்பிகாபதி மீண்டும் கீழே இருந்தவாறு மேடையில் இருந்த திண்டுக்கல் சீனிவாசனிடம், “எனது கோரிக்கையை நிறைவேற்றுங்கள், தொண்டர்களிடம் பேசுங்கள்... தலைவர்களுக்குள் பேசிக்கொண்டு இருக்காதீர்கள்..” என மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து மண்டபத்திற்கு வெளியே கொண்டு சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


இதனைத் தொடர்ந்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “2026-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும், அதிமுகவில் கடந்த சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவிற்கும், திமுகவிற்கும் 2 லட்சம் வாக்குகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. எனவே வாக்குச்சாவடி முகவர்கள் துரிதமாக பணியாற்றி நீக்க வேண்டிய பெயர்களை நீக்க வேண்டும். சேர்க்க வேண்டிய பெயர்களை சேர்க்க வேண்டும். திமுக - தோழமைக் கட்சிகளுக்கு நிதி கொடுத்ததை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துள்ளது. அதை தான் நான் வெளிப்படையாக பேசினேன்” என்றார்