×

 ‘அண்ணாமலை மீது நடவடிக்கை எடுங்க..’ போலீஸில் புகாரளித்த அதிமுக சரவணன்.. 

 


பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக மதுரை காவல் ஆணையரிடம் , அதிமுக மருத்துவ அணியின் செயலாளர் டாக்டர் சரவணன் புகாரளித்துள்ளார். 

சென்னையில் தமிழக பாஜக சார்பில் நேற்று முன்தினம் ( ஆக.25) மாலை ‘தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம்  நடைபெற்றது.  இதில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, “ எடப்பாடி பழனிசாமி என்னைப் பற்றியும், கட்சியை பற்றியும் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். முன்னொரு காலத்தில் சிலுவம்பாளையத்தில் நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் பின்னர் திமுக அமைச்சரின் தயவால் அந்த வழக்கை உடைத்து சிலுவம்பாளையம் பஞ்சாயத்து தேர்தலில் நின்று தோற்றவர்தான் இந்த பழனிசாமி.  எனக்கு நேர்மை பற்றி சொல்லித் தர எடப்பாடி பழனிசாமிக்கு அருகதை இல்லை. தவழ்ந்து காலில் விழுந்து பதவி வாங்கியவன் நான் அல்ல, மான்முள்ள விவசாயி மகன் நான். தற்குறி பழனிசாமி போல் மானம்கெட்டு பதவி வாங்கவில்லை. தமிழ்நாட்டில் மிக பெரிய டெண்டர் கட்சியாகவும், கூவத்தூரில் ஏலம் விட்டு எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் கொடுத்து ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு என்னைப்பற்றி பேச என்ன தகுதி உள்ளது?  கூட்டணிக் கட்சி தலைவராககூட பழனிசாமியை நான் ஏற்றது இல்லை. பழனிசாமி எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். ” என்று பேசியிருந்தார்.  

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையை ஆக்டோபஸ், தற்குறி என ஒப்பிட்டு விமர்சனம் செய்தனர். இதற்கு பாஜக சார்பாக கரு.பழனியப்பன் இன்று கண்டன அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் தற்போது  அதிமுக மருத்துவ அணியின் செயலாளர் டாக்டர் சரவணன், அண்ணாமலை மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

மதுரை காவல் ஆணையர் லோகநாதனிடம் அவர் அளித்த புகாரில், “ஆகஸ்ட் 25-ம் தேதி சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை களங்கப்படுத்தும் நோக்கில் பேசி உள்ளார். எடப்பாடி பழனிசாமியை அவமானப்படுத்தும் நோக்கிலும், பொது அமைதியை சீர் குலைக்கும் வகையிலும் அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார். ஆகவே, அதிமுக குறித்தும், எடப்பாடி பழனிசாமி மீதும் அவதூறு பரப்பி வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.