பாஜகவுடன் கூட்டணியும் கிடையாது ஒரு புண்ணாக்கும் கிடையாது - அதிமுக எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு
பாஜகவுடன் கூட்டணியும் கிடையாது ஒரு புண்ணாக்கும் கிடையாது என அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர் பேசியது கூட்டணியில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவை பற்றி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாங்கள் தெய்வமாக வணங்கும் அண்ணாவை சிறுமைப்படுத்தும் வகையில் பேசியதை பொறுத்துக் கொள்ளவே முடியாது. பாஜகவால் இங்கு காலூன்றவே முடியாது. எங்களவை வைத்து தான் உங்களுக்கு அடையாளமே கிடைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. தேர்தல் வரும்போது அதுபற்றி முடிவெடுத்துக்கொள்ளலாம். எங்கள் கூட்டணியில் பாஜக இல்லை. இதுதான் எங்கள் முடிவு. இது என் தனிப்பட்ட கருத்து இல்லை, இது கட்சியின் ஒட்டுமொத்த முடிவு. இனி அண்ணாமலை எங்கள் தலைவர்களை விமர்சித்தால், கடுமையான எதிர்ப்பை சம்பாதிப்பார் என கூறினார்.
இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணியும் கிடையாது ஒரு புண்ணாக்கும் கிடையாது என அதிமுக எம்.எல்.ஏ. ஒருவர் பேசியது கூட்டணியில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.அர்.ஜி. அருண்குமார் இன்று கோவை அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் எழுந்து செல்லும் போது பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய நிலையில், கோபமடைந்த எம்.எல்.ஏ., பி.அர்.ஜி. அருண்குமார் பாஜகவுடன் கூட்டணியும் கிடையாது ஒரு புண்ணாக்கும் கிடையாது என கூறினார்.