கார் பந்தய அணியை தொடங்கிய அஜித் குமார்..!
‘அஜித் குமார் ரேஸிங்’ என்கிற புதிய கார் பந்தய அணியை நடிகர் அஜித்குமார் தொடங்கியுள்ளார்.
நடிப்பு என்பதைத் தாண்டி பல நடிகர்கள் தயாரிப்பாளார், இசையமைப்பாளர், பாடகர், இயக்குநர் என திரைத்துறையிலேயே பன்முகக் கலைஞர்களாக இருந்து வருகின்றனர். சிலர் உணவகம், ஆடை வடிவமைப்பு, அழகு சாதன பொருட்கள் என வியாபாரம் சார்ந்த துறைகளில் கால் பதித்திருக்கின்றனர். அந்தவகையில் எப்போதுமே தனித்துவமாக இருக்கும் நடிகர் அஜித் குமார் ஒரு ரேஸராக இருந்து வருகிறார். கார் மற்றும் பைக் ரேசில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இது அனைவரும் அறிந்த ஒன்றுதானே என்றாலும், துப்பாக்கி சுடுதல், புகைப்படக் கலைஞர், சிறிய ரக விமானங்களை வடிவமைப்பது மற்றும் ஓட்டுவது என பல திறமைகளை உள்ளடக்கியவர்.
கடந்த சில ஆண்டுகளாக அஜித்தின் ரேஸிங் தொடர்பான தகவல்கள் எதுவும் பெரிதாக வெளியாகவில்லை. இந்தநிலையில் அண்மைக்காலமாக ரேஸிங் கார் ஓட்டுவது , ரேசிங் உடையில் அஜித் வலம் வரும் புகைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தது. இந்நிலையில் ‘அஜித் குமார் ரேஸிங்’ என்கிற புதிய கார் பந்தய அணியை தொடங்கியுள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஃபேபியன் டஃபியூ என்பவர் அஜித் குமார் அணியின் அதிகாரப்பூர்வ ரேஸிங் ஓட்டுநராக செயல்படுவார் எனவும், ஐரோப்பியாவில் நடைபெறும் 24H கார் பந்தயத்தில் போர்ஷே 992 GT3 கப் பிரிவில் அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.