“மதமும், சாதியும் ஒரு மனிதனை வெறுக்கவைக்கும்” - வைரலாகும் அஜித்தின் வீடியோ!
ஒரு பயணம் ஒரு நபரை வாழ்வில் சிறந்த மனிதராக மாற்றும் என நடிகர் அஜித்குமார் பேசிய காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிப்பு என்பதைத் தாண்டி பல நடிகர்கள் தயாரிப்பாளார், இசையமைப்பாளர், பாடகர், இயக்குநர் என திரைத்துறையிலேயே பன்முகக் கலைஞர்களாக இருந்து வருகின்றனர். சிலர் உணவகம், ஆடை வடிவமைப்பு, அழகு சாதன பொருட்கள் என வியாபாரம் சார்ந்த துறைகளில் கால் பதித்திருக்கின்றனர். அந்தவகையில் எப்போதுமே தனித்துவமாக இருக்கும் நடிகர் அஜித் குமார் ஒரு ரேஸராக இருந்து வருகிறார். கார் மற்றும் பைக் ரேசில் மிகுந்த ஆர்வம் கொண்ட அஜித், துப்பாக்கி சுடுதல், புகைப்படக் கலைஞர், சிறிய ரக விமானங்களை வடிவமைப்பது மற்றும் ஓட்டுவது என பல திறமைகளை உள்ளடக்கியவர்.
அதுமட்டுமின்றி மிகவும் பணிவான மனிதர் என எல்லோராலும் புகழப்படும் அஜித், தன்னுடன் பணிபுரிபவர்களுக்கு தானே உணவு சமைத்து பரிமாறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்தவகையில் அவருடைய பிரியாணிக்கென்றே திரைபிரபலங்கள் பலர் ரசிகர்களாக உள்ளனர். அதுமட்டுமின்றி பைக்கிலேயே பல மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்வதையும் ஹாபியாக வைத்துள்ளார். அப்படி பயணம் குறித்து அஜித் பேசிய பழைய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், “ஒரு மதம் மக்களை வெறுக்க வைக்கும், ஆனால் அவர்களை சந்தித்த பிறகு அது மாறும் என்ற வரிகளை மேற்கொள்காட்டியுள்ள அஜித்குமார், இது போலதான், மதம் மற்றும் இனத்தை வைத்து நாம் ஒரு கணிப்பில் இருப்போம், அவர்களை சந்தித்த பிறகுதான் அவர்களின் உண்மை நிலை என்னவென்று தெரியும் . ஒரு பயணம் அங்குள்ள மக்களை பற்றி அறிந்து கொள்வது மட்டுமின்றி, அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, மத நல்லிணக்கம் ஆகியவற்றை அறிந்து கொள்ள உதவும். இது போன்ற பயணங்கள் ஒரு சாதரண நபரை, சிறந்த மனிதராக மாற்றும்” என்று அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். தற்போது அஜித் பேசும் இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.